Ungaludan Stalin
செ.வெ.எண்:-20/2025
நாள்:-06.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 அன்று தொடங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவங்கப்படுகிறது.
இந்த திட்டமானது ஜூலை 15 ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வரும் 15.07.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முதல்கட்டமாக 112 முகாம்கள் 15.07.2025-ல் தொடங்கி 14.08.2025 வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 96 முகாம்கள் 15.08.2025 முதல் 14.09.2025 வரை நடைபெறும். மூன்றாம் கட்டமாக 89 முகாம்கள் 15.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெறும் மற்றும் நான்காம் கட்டமாக 63 முகாம்கள் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் ,ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இத்திட்டத்தின்கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இந்தப்பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் நடைபெறும் முகாம்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.