Close

Vaigai Ilakkia Thiruvila-2024-2025

Publish Date : 06/12/2024
.

செ.வெ.எண்:-09/2024

நாள்:-04.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

“வைகை இலக்கியத் திருவிழா 2024-2025“ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “வைகை இலக்கியத் திருவிழா 2024-2025“ திண்டுக்கல்லில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.12.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

வைகை இலக்கியத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரையில் நடத்தப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்ககம் ஆகியவை சார்பில் வைகை இலக்கியத் திருவிழா 2024-2025 விரைவில் நடத்தப்படவுள்ளது. இதை முன்னிட்டு இளைஞர் இலக்கியத் திருவிழா கல்லுாரிகளில் நடத்தப்படவுள்ளது. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு வைகை இலக்கியத்திருவிழாவில் பரிசுகள் வழங்கிடவும், சிறந்த ஓவியங்களை காட்சிப்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைகை இலக்கியத் திருவிழாவில், கலை நிகழ்ச்சிகள், புத்தகக்கண்காட்சி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் ஓவியக்கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் புகைப்படக் கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதை, கட்டுரை மற்றும் நுால் திறனாய்வு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. விழாவிற்கு தேசிய மற்றும் மாநில அளவில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்கள், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், வைகை நதி பாயும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.