Close

Vaigai Ilakkia Thiruvila-2025

Publish Date : 26/01/2025
.

செ.வெ.எண்:-51/2025

நாள்:-24.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

“வைகை இலக்கியத் திருவிழா“ நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் இன்று(24.01.2025) “வைகை இலக்கியத் திருவிழா“ நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் 5 இடங்களில் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. மதுரையில் நடைபெற்று வந்த வைகை இலக்கியத் திருவிழா இவ்வாண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. வைகை இலக்கியத் திருவிழா 2025-ஐ திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திட அனுமதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்களின் இலக்கியத்திறனை மேம்படுத்தும் வகையில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் வைகை இலக்கியத் திருவிழா-2025 திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் ஆகிய இரண்டு அரங்கங்களுடன் 2 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

விழாவில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஓவியக் கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதை, கட்டுரை மற்றும் நுhல் திறனாய்வு, புத்தகக் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. மேலும் வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த 2 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 3,600-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்று இலக்கிய ரசனைகளை பயன்படுத்திக்கொண்டனர்.

வைகை இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு நுால் திறனாய்வு, நுால் அறிமுகப் போட்டி, ஓவியப் போட்டி, 2 நிமிட பேச்சுப் போட்டி, உடனடி ஹைக்கூ உருவாக்கம், இலக்கிய வினாடி வினா, விவாத மேடை, டிஜிடல் காலேஸ் மேக்கிங், பேச்சுப்போட்டி, பிராம்ட் இன்ஜினியரிங்(Prompt Engineering) என 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.4,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 என வெற்றியாளர்கள் 90 பேருக்கு பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் இந்த நிறைவு விழாவில் வழங்கப்பட்டது.

இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வு, தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த வைகை இலக்கியத் திருவிழா பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

வைகை இலக்கியத் திருவிழா-2025 பொதுமக்களிடையை வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடைய இலக்கிய ஆர்வத்தை தூண்டவும்; இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா இப்பகுதிகளை சார்ந்த இலக்கியத்தை நேசிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கு இலக்கியத்துடன் உறவை மேம்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், பொது நூலக இயக்ககம் இணை இயக்குநர் திரு.ச.இளங்கோ சந்திரகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார், பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரி முதல்வர் முனைவர் தி.வாசுதேவன், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.