Close

World Population Day 2024 – meeting

Publish Date : 13/07/2024
.

செ.வெ.எண்:-23/2024

நாள்:-09.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. பெருகி வரும் மக்கள் தொகை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள்(ஜூலை 11-ஆம் தேதி) உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், உலக மக்கள்தொகை 812 கோடியாக உள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை 144 கோடியாகவும், தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை 23.34 இலட்சமாக உள்ளது.

உலக மக்கள்தொகை தினம்-2024-ன் முழக்கமாக “ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலமே, அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்“ மற்றும் கருப்பொருளாக “தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது“ என்ற நோக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, நகர வளர்ச்சித்துறை, உணவு மற்றும் பொது விநியோகம், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.

போதிய கர்ப்ப இடைவெளியினால், தாயின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் வரை கொடுப்பதால் தாய் மற்றும் சேய் நலம் மேம்படுவதுடன், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான எடை அதிகரிக்கிறது. பிரசவ காலங்களில் ஏற்படும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைகிறது.

தாய் மற்றும் குழந்தையின் நல்வாழ்வுக்கு, 20 வயதிற்கு பிறகு முதல் கர்ப்பம் ஆவது சிறந்தது. இரண்டு பிறப்புகளுக்கு இடையில் குறைந்தது 3 வருட இடைவெளி மற்றும் கருக்கலைப்புக்குப் பிறகு குறைந்தது 6 மாத இடைவெளி இருப்பது நல்லது.

குடும்ப நலத் தேவைகளை பூர்த்தி செய்வதில், தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கருத்தடை உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும். கருக்கலைப்பு தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படும்.

குடும்ப நல சேவைகள் 11.07.2024 முதல் 24.07.2024-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளான, தற்காலிக குடும்ப நல சேவைகள்(ஐயுசிடி பொருத்துதல், ஊசி மூலம் கருத்தடை), நிரந்தர குடும்ப நல சேவைகள்(பெண்களுக்கான கருத்தடை முறைகள், ஆண்களுக்கான கருத்தடை முறைகள்) ஆகிய குடும்ப நலத்திட்டமிடல் சேவைகள் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை (டியூபெக்டமி, லேப்ராஸ்கோபிக்) எளிமையானவை. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்கப்படும். ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சை(நவீன வாசக்டமி) எளிமையானது. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்படும்.

குடும்ப நல சேவையில் லேப்ராஸ்கோபிக் முறையை செயல்படுத்துவதில் திண்டுக்கல் மாவட்டம், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும், நவீன தழும்பில்லா கருத்தடை அறுவை சிகிச்சை(என்எஸ்வி) முறையை செயல்படுத்துவதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலம்) மரு.கே.கௌசல்யாதேவி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் திருமதி மனோரஞ்சிதம் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.