Close

Mass contact – Rettiyapatti – Natham

Publish Date : 10/01/2025

செ.வெ.எண்:-15/2025

நாள்:-08.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

ரெட்டியப்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் 418 பயனாளிகளுக்கு ரூ.10.09 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ரெட்டியப்பட்டி ஊராட்சியில் இன்று(08.01.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 418 பயனாளிகளுக்கு ரூ.10.09 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

மக்கள் தொடர்பு முகாம் என்பது மற்ற மனுக்களை வாங்கும் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் ஒரு வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி. திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை வழங்க நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும். வரப்பெற்ற மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கள் தொடர்பு முகாமை பொறுத்தவரை, முகாம் நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மக்கள் தொடர்பு முகாமில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படும். மேலும், மனுக்களுடன் ஏதேனும் ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரியப்படுத்தி, அந்த ஆவணங்களை பெற்று, இணைத்து அந்த மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். இதுதான் மக்கள்தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும். மக்கள் தொடர்பு முகாம் பயன்பெற வேண்டிய நாள். மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் நாள்.

அதனடிப்படையில், இன்று நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் 418 பயனாளிகளுக்கு ரூ.10.09 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊட்டச்சத்து பெட்டகம், புதிய குடும்ப அட்டை, தேசிய தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையகம் பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

எனவே, பொது மக்கள் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக மனுக்களை வழங்க வேண்டும். கிராமங்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். இம்முகாமிற்கு அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளதால் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். அரசின் திட்டங்களை பெற்றுக்கொள்ள தகுதிகள் என்ன என்பதை அறிந்துகொள்ள எளிதாக அமையும். எனவே, பொதுமக்கள் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

நத்தம் விவசாயம் சார்ந்த ஒரு பகுதியாகும். பொதுமக்களுக்கு விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கலாம். இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை நேரில் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறிந்து அறிந்து கொள்ள எளிதாக அமையும். மேலும், மருத்துவ துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள் இங்கு தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும் அரசின் திட்டங்கள் தொடர்பாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, அதில் ஏதேனும் திட்டங்கள் தங்களுக்கு பயன்படுமாயின் அந்த திட்டங்கள் குறித்த தகவலை அறிந்து, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில், வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா(முழுப்புலம் பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல்) 27 நபர்களுக்கும், சிறுகுறு விவசாய சான்று 6 நபர்களுக்கும், உழவர் பாதுகாப்பு அட்டை 109 பயனாளிகளுக்கும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 45 பயனாளிகளுக்கும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ.9,500 மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்பில் தேசிய தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.21,650, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 225 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ரூ.9,78,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 418 பயனாளிகளுக்கு ரூ.10.09 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், நத்தம் வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.