Close

Republic Day Celebration – Meeting

Publish Date : 10/01/2025
.

செ.வெ.எண்:-17/2024

நாள்:-08.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.01.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினவிழா ஜனவரி 26-ஆம் தேதி சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு, குடியரசு தினவிழாவில் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர் படை அணிவகுப்புகள் நடைபெறவும், மொழிப்போர் தியாகிகள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கப்படவுள்ளது.

குடியரசு தினவிழாவினை முன்னிட்டு, கொடி கம்பத்திற்கு புதிய வர்ணம் பூசி, மைதானத்தை தூய்மைபடுத்தி விழாவிற்கு தயார் செய்திடவும், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அமர்ந்து விழாவினை கண்டுகளிக்கும் வகையில் தேவையான இருக்கைகள் அமைத்திடவும், விழாவில் பங்கேற்கவுள்ள மொழிபோர் தியாகிகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு முறையாக விழா அழைப்பிதழ் வழங்கி அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா அன்று பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு ஏதுவாக, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காலை 6.30 மணி முதலே சிறப்பு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பணியில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு, அவர்கள் பணியினை மென்மேலும் சிறப்பாக செய்திட ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிடவும், தேச ஒற்றுமையை விளக்கிடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், தீயணைப்பு வாகனம், 108 வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போதிய அளவில் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.