Close

The Hon’ble Food and Civil Supply Minister – COOPERATIVE FESTIVAL

Publish Date : 24/11/2025
.

செ.வெ.எண்:-87/2025

நாள்:-20.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு
மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிழ்கள் மற்றும் கேடயங்கள் மற்றும் 4,506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் பி.வி.கே.மஹாலில் இன்று (20.11.2025) கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிழ்கள் மற்றும் கேடயங்கள் மற்றும் 4,506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய திருமதி. இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கூட்டுறவு கொடியேற்றி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டு விவசாய மக்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கும், கூட்டுறவுத் துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கும் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றோம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் மொத்தம் 295 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாய பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலம் பல வகையான கடன்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், தாழையூத்து, வாகரை, கொழுமங்கொண்டான், கப்பல்பட்டி, கொத்தயம், முத்துநாயக்கன்பட்டி, சிந்தலைப்பட்டி, வடகாடு, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, எரமநாயக்கன்பட்டி, வெரியப்பூர் உள்ளிட்ட 13 ஊராட்சிப் பகுதிகளில் 13 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் புதிதாக துவங்கப்பட்டு. பலவகையான கடன்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் 45,145 நபர்களுக்கு ரூ.525.90 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களால் கடன் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க, மாநிலம் முழுவதும் 12,55,233 பயனாளிகளுக்கு ரூ.4818.88 கோடி நகைக்கடன் தள்ளுபடிவழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கடன் தள்ளுபடி 3,793 குழுக்களைச் சார்ந்த 34,833 நபர்களுக்கு ரூ.87.66 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2024-2025-ஆம் நிதியாண்டில் 3,12,808 நபர்களுக்கு ரூ.3418.46 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 1,81,741 நபர்களுக்கு ரூ.2237.19 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 31 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆத்தூரில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. காளாஞ்சிபட்டியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு குடிமைப்பணி பயிற்சி நிலையம் துவக்கப்பட்டு அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேர நியாய விலைக் கடைகளும், 481 பகுதி நேர நியாய விலைக்கடைகளும், 122 நகரும் நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும், 4 முழு நேர நியாய விலைக் கடைகளும், 20 பகுதி நேர நியாய விலைக்கடைகளும், 24 நகரும் நியாய விலைக்கடைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க தொடங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆடசிப்பொறுப்பேற்ற பின்பு, 134 முழு நேர நியாய விலைக் கடைகளும்,115 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் என மொத்தம் 249 நியாய விலைக்கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 125 நிழற்கூரைகள் அமைக்கப்பட்ட நியாய விலைக்கடைகள், 260 சில்வர்டிரம் உள்ள நியாய விலைக்கடைகள், 315 கழிவறை உள்ள நியாய விலைக்கடைகள் என மொத்தம் 700 நியாய விலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள, தாயுமானவர் திட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் 62,672 குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் தேடி பொதுவிநியோகத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 90,828 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், ஏற்கனவே உள்ள பழைய விற்பனை முனைய இயந்திரத்தினை (Old POS LO வகை) கைரேகையுடன் கூடிய புதிய விற்பனை முனைய இயந்திரமாக (New POS L1 வகை) மாற்றம் செய்யப்பட்டு 14.11.2025 வரை 223 கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6,800 கடைகளுக்கு ரூ.53.00 கோடி மதிப்பீட்டில் புதிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக பிரிக்கப்பட்ட 261 நியாய விலைக் கடைகளுக்கு விரைவில் புதிய விற்பனை முனைய கருவி வழங்கப்பட உள்ளது. 510 எண்ணிக்கையிலான கடைகள் பொலிவுறச் செய்யும் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், நிழல்கூரை அமைத்தல், வண்ணம்பூசுதல், பொதுமக்கள் காத்திருக்கும்போது அமர்வதற்கு இருக்கைகள் (Stone Bench) அமைக்கப்பட்டு வருகிறது. பொருட்களை நல்ல முறையில் காட்சிப்படுத்தப்படும் வகையில் சில்வர்டிரம்களில் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் 6,86,321 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி 11,407 மெட்ரிக் டன்னும், சர்க்கரை 853 மெட்ரிக் டன்னும், கோதுமை 246 மெட்ரிக் டன்னும், துவரம் பருப்பு 578 மெட்ரிக் டன்னும், பாமாயில் 582 கிலோ லிட்டரும், மண்ணெண்ணெய் 144 கிலோ லிட்டரும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளுக்கு FSSAI உரிமம் பெறப்பட்டுள்ளது. 239 நியாய விலைக் கடைகள் ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு 2022-2023-ஆம் ஆண்டு முதல் 2025-2026-ஆம் நிதியாண்டு வரை ரூ.33,57,73,696 இலட்சம் பொது விநியோகத் திட்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,85,629 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2800 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், பழனி வட்டத்தில் 3850 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், வேடசந்தூரில் 3900 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், நத்தத்தில் 1500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், வத்தலக்குண்டு பகுதியில் 4500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், கொடைக்கானலில் 1150 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், ஆத்தூரில் 3000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும் செயல்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சுள்ளெறும்பு பகுதியில் புதிதாக 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், குஜிலியம்பாறையில் புதிதாக 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டன்சத்திரத்தில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், நத்தத்தில் 400 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும், கோவில் அம்மாபட்டியில் 9000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிட்டங்கியும் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் விதமாக நியாய விலைக்கடை விற்பனையாளர் கட்டுநர் பணியிடங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மண்டலத்தில் 388 விற்பனையாளர் பணியிடங்களும், 2 கட்டுநர் பணியிடங்களும், கூட்டுறவு நிறுவனங்களில் 76 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது, மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 32 உதவியாளர் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 60 உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் “உங்களுடன்ஸ்டாலின்” 15.07.2025 அன்று துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் அரசு சேவைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக 13 துறைகள் மற்றும் (நகர்ப் புறங்களில்) மற்றும் 43 சேவைகள் 15 துறைகள் மற்றும் 46 சேவைகள் (கிராமப் புறங்களில்) வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்து பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களில் நாளது வரை கடன் கோரி வரப்பெற்ற மனுக்களில் தகுதியான 53 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1252 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 31 அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆக மொத்தம் 1283 பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ரவை. சம்பாரவை, மைதா மற்றும் சேமியா ஆகியவை கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகள் மூலமாக மாதம் தோறும் 30.63 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் காலை உணவு மையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைகளுக்காக யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல் மற்றும் பழனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்பட்டு, நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேடசந்தூர் வட்டாரத்திலுள்ள பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைநிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் கணினி மயமாக்கும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிலும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மைய வங்கியியல் தீர்வுமுறை நடைமுறையில் உள்ளது. இந்த வங்கிகளில் மொபைல் பேங்கிங். RTGS. NEFT போன்ற வசதிகள் நடை முறையில் உள்ளன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 27.09.2022 முதல் UPI Integration வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் கூகுல்பே, பேடி எம் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயப்படுத்தும் பணிகள் நடவடிக்கையில் உள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், 25 பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களையும் கணினிமயப்படுத்துவதற்கு நபார்டு வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”எல்லோரும் எல்லாம்” பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

மேலும், சாணார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 1 பயனாளிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 1664 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு (132 குழுக்கள்) ரூ.13.62 கோடி மதிப்பீட்டில் கடனுதவி, 1619 பயனாளிகளுக்கு ரூ.27.19 கோடி மதிப்பீட்டில் கே.சி.சி பயிர் கடனுதவி, 629 பயனாளிகளுக்கு ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதனக் கடனுதவி, 10 பயனாளிகளுக்கு ரூ.0.12 கோடி மதிப்பீட்டில் மத்தியகால விவசாயக் கடனுதவி, 6 பயனாளிகளுக்கு ரூ.0.03 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் கடனுதவி, 16 பயனாளிகளுக்கு ரூ.0.17 கோடி மதிப்பீட்டில் சிறுவணிகர் கடனுதவி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் வாயிலாக 528 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு (44 குழு) ரூ.4.42 கோடி மதிப்பீட்டில் கடனுதவி, 12 பயனாளிகளுக்கு ரூ.0.06 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் கடனுதவி, 3 பயனாளிகளுக்கு ரூ.0.02 கோடி மதிப்பீட்டில் கைம்பெண்கள் கடனுதவி, 10 பயனாளிகளுக்கு ரூ.0.09 கோடி மதிப்பீட்டில் சிறுவணிகர் கடனுதவி, 4 பயனாளிகளுக்கு ரூ.0.39 கோடி மதிப்பீட்டில் வீட்டுவசதிக் கடன் கடனுதவி, 5 பயனாளிகளுக்கு ரூ.0.04 கோடி மதிப்பீட்டில் மத்திய காலக்கடன் கடனுதவி என மொத்தம் 4506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கூட்டுறவுத்துறைப் பணியாளர்களுக்கும், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் /செயலாட்சியர் திருமதி.இரா.சுபாஷினி, திண்டுக்கல் சரக துணைப்பதிவாளர் திருமதி.பி.உஷா நந்தினி, திண்டுக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் மரு.க.வாணீஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.