Agri Grievance Day Petition
செ.வெ.எண்: 51/2025
நாள்: 19.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.12.2025) நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னகால் குளம் மறுகால் தூர்வாருவதற்கும், நீலமலைக் கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் யானை புகுந்து விவசாய நிலத்தை சேதப்படுத்துவதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், தொப்பம்பட்டி மற்றும் கள்ளிமந்தையம் வறட்சி பகுதியாக இருப்பதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு பயிர் கடன்களை இரத்து செய்ய வேண்டுமென்று கூறினார். தொடர்ந்து, நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி நிலவியல் ஓடை ஆற்றை ஒட்டியுள்ள சாலை பகுதியை சரிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
பஞ்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுரைக்காப்பட்டி காய்கறி சந்தை அருகில் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என கூறினார். தங்களது பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு வெடிசத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். எனவே, வெடிசத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, அந்த விவசாயிக்கு வெடிசத்தம் கேட்டப் பகுதியை சென்னையிலிருந்து ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை அலுவலகம் செயல்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளிவரும் கழிவு நீரை சரிவர சுத்திகரிக்காமல் குடகனாறு மாசுபடுவதுடன் வேடசந்தூர் வரையுள்ள நிலங்கள் மோசமாக பாதிப்படைந்து வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி புதுரோடு பகுதியில் நான்குவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகையக்கோட்டை, இராமநாதபுரம் பகுதியில் பயிர்கடன் வழங்க வேண்டுமென்றும், அட்மா திட்டத்தின் மூலம் வெளிமாநில பயிற்சி வழங்க வேண்டுமென்றும் கூறினார். மேலும், தென்னைமரத்தில் வெள்ளை சுருள் பூச்சி தாக்குதலை தடுப்பதப்பதற்கான வழிமுறைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்கியதால் நன்றி தெரிவித்தார்.
மேலும், கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி வரதமாநதி உட்பட்ட கலிக்கநாயக்கன்பட்டி குளத்திற்கு தண்ணீர் திறந்து விடவும், பண்ணைக்காடு பகுதியில் உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக அதை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 67 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்திற்கு தான் அணையினை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு ரூ.19.00 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செயது அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் அணையினை தூர்வாருவதற்கு பணிகள் துவங்கப்படும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத்திற்கு 45 மனுக்கள் பெறப்பட்டதில் 21 மனுக்களுக்கு பதில் விபரம் பெறப்பட்டு 24 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2025-ஆம் ஆண்டு குளிர் பருவகாலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக 36.12 மி.மீ மழையளவும், கோடை பருவகாலமான மார்ச் முதல் மே வரை சராசரியாக 182.75 மி.மீ மழையளவும், தென்மேற்கு பருவகாலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 118.62 மி.மீ மழையளவும் பொழிந்துள்ளது. வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் முதல் டிசம்பர் (16.12.2025) வரை 327.95 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் சராசரியாக 65.00 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிரணயிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் (16.12.2025) வரை 30.05 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 01.01.2025 முதல் 31.12.2025 வரை மொத்தம் 836.00 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 01.01.2025 முதல் 16.12.2025 வரை 665.44 மி.மீ மழையளவு மட்டுமே பொழிந்துள்ளது. எனவே, இயல்பான மழையளவைக் காட்டிலும் குறைவான மழையளவே பொழிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 16.12.2025 வரை யூரியா உரம் விநியோகம் 12,324 மெ.டன், இருப்பு 2,582 மெ.டன், டிஏபி விநியோகம் 2,675 மெ.டன், இருப்பு 1,942 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 3,290 மெ.டன், இருப்பு 931 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1,235 மெ.டன், இருப்பு 800 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 6,900 மெ.டன், இருப்பு 5,451 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 850 மெ.டன், இருப்பு 450 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1,524 மெ.டன், இருப்பு 120 மெ.டன் என மொத்தம் 28,798 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12,276 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் உரங்களை பெற்று பயனபெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர். ம.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன் அவர்கள் ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.