Puthumai Penn and Tamilputhalvan Thittam
செ.வெ.எண்:-55/2025
நாள்:-21.12.2025
திண்டுக்கல் மாவட்டத்தில் ”தமிழ்ப் புதல்வன்” மற்றும் “புதுமைப் பெண்” திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக பல்வேறு உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு (Certificate Course), பட்டயப் படிப்பு (Diploma/ITI./D.TEd., Courses), இளங்கலைப் பட்டம் (Bacholor Degree – B.A., B.Sc., B.Com., B.B.A. B.C.A., and all Arts & Science, Fine Arts Courses), தொழில் சார்ந்த படிப்பு (B.E. B.Tech., M.B.B.S., B.D.S. B.Sc., (Agri), B.V.Sc., B.Fsc., B.L. etc..) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing. Pharmacy. Medical Lab Technology. Physiotherapy etc.) ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.09.2022 அன்று சென்னை. பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேறும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் ”தமிழ்புதல்வன்” திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 09.08.2024 அன்று கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், ”புதுமைப்பெண்” திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அரசு பள்ளிகளில் படித்துள்ள மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர் கல்வியில் சேறும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் “புதுமைப்பெண்” திட்டத்தின் விரிவாக்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தூத்துக்குடியில் 30.12.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
உயர்கல்வி மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், விவசாயம், செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் சட்டம், பொறியியல், தொழிற்கல்வி சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் இந்திய அரசு. தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையை அவர்கள் முழுமையாக அப்படிப்பினை படிக்கும் வரை வழங்கப்படுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “புதுமைப்பெண்” திட்டத்தின்கீழ் 11,858 மாணவிகளும், “தமிழ்புதல்வன்” திட்டத்தின்கீழ் 8,984 மாணவர்களும் என மொத்தம் 20,842 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
“புதுமைப்பெண்” திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் திண்டுக்கல் எம்.வி.எம் முத்தையா மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி செல்வி ஆர்த்தி அவர்கள் தெரிவித்தாவது.
என் பெயர் ஆர்த்தி. நான் கொண்டம நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 3 குழந்தைகள். நான் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார். எனது தாய் அதன் பிறகு வேறு திருமணம் செய்து கொண்டார். எனவே நாங்கள் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து வந்தோம். பாட்டியால் வேலைக்கு செல்ல இயலாது. எனவே எனது அத்தையின் உதவியால் குடும்ப செலவுகளைப் பார்த்து வந்தோம். பாட்டியும் இறந்து விட்டார். எனது அக்கா தற்பொது தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அந்த வருமானத்தை வைத்துதான் நாங்கள் மூவரும் வாழ்ந்து வருகிறோம்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு மேற்ப்படிப்பு தொடர வறுமை ஒரு தடையாக இருந்ததன் காரணமாக வேலைக்கு செல்லலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது அக்காவும் நானும் வேலைக்கு சென்று எங்களுடைய தம்பியை படிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். எனது ஆசிரியரிடம் மேற்ப்படிப்பு தொடர ஆலோசனை கேட்டேன். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மேற்ப்படிப்பு தொடர மாதந்தோரும் ரூ.1000 வழங்கி வருகிறார்கள் என்பதை கூறினார். இதை பற்றி எனது அக்காவிடம் கூறினேன். எனது அக்காவும் சந்தோசம் அடைந்து, என்னை எம்.வி.எம் முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ் பாடப்பிரிவில் சேர்த்தார்கள். தற்போது நான் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறேன். புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 பெற்று படித்து வருகின்றேன். இந்த ஊக்கத் தொகையின் மூலம் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், பாடப்புத்தகம் மற்றும் திறன் பயிற்சிக்கு பயன்படுத்தி வருகிறேன். இந்த திட்டத்தின் மூலம் எனது கல்லூரி கனவு நிறைவேறியது. என்னை போன்ற ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உயர்கல்வியை தடையின்றி தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. பெண்களின் கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
”தமிழ்புதல்வன்” திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் திண்டுக்கல் ஸ்ரீவி கல்லூரியில் பி.காம்(சிஏ) பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஜெ.மனோகரன் அவர்கள் தெரிவித்தாவது.
என் பெயர் ஜெ.மனோகரன். நான் ஆத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். நான் தாடிக்கொம்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். 12-ம் வகுப்பு வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி படித்து 493 மதிப்பெண் பெற்றேன்.
நான் இப்போது ஸ்ரீவி கல்லூரியில் பி.காம்(சிஏ) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித்தொகை வழங்கும் “தமிழ்புல்வன்” திட்டத்தில் விண்ணப்பித்து நான் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகிறேன். இந்த ஆயிரம் ரூபாய் என்பது என் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இந்தத் தொகை எனக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கும் கல்வி சார்ந்த செலவிற்கும் மிகவும் உதவிகரமாக உள்ளது. அரசு பள்ளிகளில் படிப்பது வறுமை அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் என்பதை என் வாழ்வில் உணர்த்தும் வகையில் இந்த ”தமிழ்புதல்வன்” திட்டம் விளங்குகிறது. இந்த உதவித்தொகை பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கல்வி உபகரணங்கள் வாங்க இந்த தொகை எங்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் பெற்றோர்களின் சுமை குறைகிறது. என்னைப்போன்ற நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியை தடையின்றி தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்..