The Hon’ble Rural Development Minister-Development Work
செ.வெ.எண்:-60/2025
நாள்:24.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.51.93 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(24.12.2025) அடிக்கல் நாட்டி, ரூ.51.93 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டி காலனியில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான பணிகள், ரெங்கப்பனூரில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டுவதற்கான பணிகள், உலகம்பட்டி வடக்கியூரில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான பணிகள், சத்திரப்பட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான பணிகள் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சி, அய்யம்பாளையத்தில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடை மற்றும் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிய முழுநேர நியாயவிலைக்கடைகள் கட்டுவதற்கான பணிகள் என மொத்தம் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் இன்று (24.12.2025) அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அகரம் பேரூராட்சி லட்சுமணம்பட்டியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டடம். ஆத்துப்பட்டியில் ரூ.6.93 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பாலம், ரெங்கப்பனூரில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை, சுக்காம்பட்டி பிரிவு, நால்ரோட்டில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை என மொத்தம் ரூ.51.93 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து போது, ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை 60 வயது கடந்தால் வழங்கப்பட்டது. அதேபோல் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார். தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காவேரி குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 196 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. காவேரி குடிநீர் வரும் போது அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்சனை தீர்ந்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ”புதுமைப்பெண்” மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.இரா.இராஜா, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேல் முருகன், திரு.மகுடபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

Oplus_16908288

.

.