Tamil Development Dept – Rally
செ.வெ.எண்:-67/2025
நாள்:-26.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை இன்று (26.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசின் மூலம் ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் ஆணையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரையிலான ஒரு வார காலத்திற்குக் கொண்டப்பட்டு வருகிறது.
மேலும், ஆட்சிமொழிச் சட்ட வார கொண்டாட்ட இறுதி நாளான இன்றைய தினம் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் ஒருநாள் நிகழ்வாக ஆட்சிமொழிச்சட்டம் குறித்து விழிப்புணர்வினை இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் தமிழின் இன்றியமையா தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். தமிழே மிகவும் பண்பட்ட மொழி, அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குவது தமிழ் ஒன்றே ஆகும். இத்தகைய சீரும், சிரப்புமிக்கதாக தமிழை நமது தமிழறிஞர்கள் வளர்த்துள்ளனர். அவர்கள் வழியில் தமிழை தழைத்தோங்க செய்வதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியானது முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இப்பேரணியில், ஜி.டி.என் கலைக் கல்லூரி, பான் செக்கர்ஸ் கலை (ம) அறிவியல் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ( மகளிர்), புனித மரியன்னை மேனிலைப் பள்ளி , எம்.எஸ்.பி மேனிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லுரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பா.விஜயபாண்டியன் மற்றும் தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.