EDUCATION TOUR
செ.வெ.எண்: 12/2026
நாள்: 08.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் ”கல்விசார் கள பயணம்” வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் ”கல்விசார் கள பயணம்” வாகனத்தை இன்று (08.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளவும் கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மூலம் சுற்றுச்சூழல் துறை உருவாக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் அந்நாட்டின் இயற்கை வளமே ஆதாரமாகும். மேலும், தாவரங்கள், விலங்கினங்கள், நீர், காற்று ஆகியவை மனிதன் உயிர்வாழ துணைநிற்கும் இயற்கையின் அங்கங்களாகும். இயற்கை வளங்கள் இல்லாமல் மனிதன் உயிர்வாழ இயலாது. பல்வேறு வகையான இயற்கை வளங்கள் காடுகளில் பொதிந்து கிடக்கின்றன. பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு புகலிடமாக காடுகள் விளங்குகின்றன.
மக்கள்தொகை பெருக்கத்தாலும் அறிவியல் தொழில்நுட்பத்தாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து 2 நாட்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் ”கல்விசார் கள பயணம்” மேற்கொண்டுள்ளனர். இக்கள பயணத்தில் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, பழனி நகரவை மேல்நிலைப்பள்ளி, பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள், 50 மாணவ,மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் இயற்கை குறித்த விழிப்புணர்வு முகாம் 2 நாட்கள் கொடைக்கானலில் பேரிஜம் லேக், வானியல் ஆராய்ச்சி மையம், பைன்காடுகள், பிரையண்ட் பூங்கா, பசுமைப்பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் திண்டுக்கல் மாசுகட்டுபாடு செயற்பொறியாளர், கொடைக்கானல் வன அலுவலர்கள், கொடைக்கானல் உதவி தோட்டக்கலை அலுவலர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தாளர்களாக பங்கேற்க உள்ளார்கள். மேலும், இம்முகாம்களில் மாணவ,மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த வினாடி – வினா மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
எனவே, இளம் தலைமுறையினராக விளங்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் இயற்கை குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் இயற்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”மீண்டும் மஞ்சப்பை – பிளாஸ்டிக் பைக்கு குட்பை” என்ற வாசகம் பொறித்த மஞ்சப்பைகளை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில், உதவி வன அலுவலர் திருமதி. நிர்மலா,மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி. அமுதா, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆ.ஹரிஹரசுதன், முதலமைச்சரின் பசுமைத்தோழர் செல்வி. லேகா வர்ஷினி அவர்கள் ஆகியோர் உட்பட ஆசிரியர் பெருமக்கள், மாணவ–மாணவிர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.