Science Festival
செ.வெ.எண்: 22/2026
நாள்: 09.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதல் சுற்று அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவ/மாணவியருடன் கலந்துரையாடினார்.
அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், பசுமை ஆற்றல்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், அறிவியல்சார் தொழில் முனைவு ஆகியவை உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பதின் பருவ மாணவ, மாணவியரிடம் அறிவியல் தொடர்பான ஆர்வத்தை ஊக்குவித்து உயர்கல்வியில் அறிவியல் தொடர்பான நாட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பொருட்டு பள்ளி மாணவ/மாணவியருக்கான போட்டிகள், அறிவியல் செய்முறை விளக்கங்கள், அறிவியல் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள 03.12.2025 முதல் 28.12.2025 வரை இணைய வழியில் மாணவ/மாணவியர் முன்பதிவு செய்திருந்தனர். இதன்படி அறிவியல் கண்காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த 1157 குழுக்களைச் சார்ந்த 2314 பள்ளி மாணவ/மாணவியரின் படைப்புகள் இன்று (09.01.2026) மாவட்டத்தின் 4 மையங்களில் முதல் சுற்றில் காட்சிப் படுத்தப்பட்டன. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஒரு பிரிவாகவும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும் தனித்தனியாக படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், 6 – 8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும், 9 – 10 வகுப்புகள் ஒரு பிரிவாகவும் மற்றும் 11 – 12 வகுப்புகள் மற்றொரு பிரிவாகவும் மொத்தம் வகுப்பு வாரியாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதல் சுற்று அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவ/மாணவியருடன் கலந்துரையாடினார். அவர்கள் காட்சிப்படுத்தியிருந்த படைப்புகள் குறித்து கேட்டபோது மாணவ/மாணவியர் உற்சாகமுடன் விளக்கம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மாணவ/மாணவியரை வெகுவாகப் பாராட்டினார். அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த மையத்தில் 304 பள்ளிகளில் இருந்து 469 படைப்புகள் 938 மாணவ/மாணவியரால் காட்சிப்படுத்தப்பட்டன.
இதேபோல், திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி, எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி கொடைக்கானல் ஆகிய மையங்களிலும் முதல் சுற்று அறிவியல் கண்காட்சிகள் நடைபெற்றன. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 1157 குழுக்களைச் சார்ந்த 2314 பள்ளி மாணவ/மாணவியரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அனுபவம் மிக்க போராசிரியர்கள்/விரிவுரையாளர்கள் கொண்ட குழுக்கள் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக 40 வீதம் மொத்தம் 240 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட 240 படைப்புகள் அறிவியல் திருவிழா நடைபெறும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை எம்.எஸ்.பி.பள்ளியில் பிரிவு வாரியாக ஒவ்வொரு நாளும் 40 படைப்புகள் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் காட்சிப்படுத்தப்படும் படைப்புகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் இடம் என பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. பங்கேற்கும் மாணவ / மாணவியர் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்டக் கல்வி அலுவலர்கள் திரு.த.ஜான் பிரிட்டோ, திருமதி.த.அமுதா, திரு.க.சண்முகநாதன், பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி இணைப்பதிவாளர் திரு.ஜீ.விஜய், அறிவியல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெ.தினகரன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.