Close

Science Festival

Publish Date : 10/01/2026

செ.வெ.எண்: 26/2026

நாள்: 10.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28-01-2026 முதல் 03-02-2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், பசுமை ஆற்றல்கள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், அறிவியல்சார் தொழில் முனைவு போன்றவை உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பதின் பருவ மாணவ, மாணவியரிடம் அறிவியல் தொடர்பான ஆர்வத்தை ஊக்குவித்து உயர்கல்வியில் அறிவியல் தொடர்பான நாட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அறிவியலின் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் “நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!” என்ற குறிக்கோளுடன் 24.01.2026 அன்று காலை 06.00 மணியளவில் திண்டுக்கல் எம்.எஸ்.பி.ஆடிட்டோரியத்திலிருந்து துவங்கி மீண்டும் இதே அரங்கிற்கு வந்து நிறைவு செய்யும் வகையில் “அறிவியல் மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. இதில், ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ/மாணவியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பள்ளிப் பிரிவிலும், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பொதுப் பிரிவிலும் பங்கேற்கலாம். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.4000/-, மூன்றாம் பரிசு ரூ.3000/-, நான்காம் பரிசு ரூ.2000/- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.1000/- என மொத்தம் 4 பிரிவுகளில் 20 நபர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.

மேலும், கீழ்க்காணும் QR Code மூலம் இணையவழியில் முன்பதிவு செய்து இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் டி-ஷர்ட்டுகள், தொப்பிகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும், அறிவியல் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 20.01.2026-ஆம் தேதிக்குள் QR Code மூலம் இணையவழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://dindigulsciencefest.com/marathon என்ற இணையதள முகவரிக்கும் அல்லது திண்டுக்கல் மாவட்ட வியைாட்டு அலுவலர் தொலைபேசி எண் (74017 03504)-க்கும் தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.