The Hon’ble Food and Civil Supply Minister – Free Cycle
செ.வெ.எண்:-27/2026
நாள்:-10.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (10.01.2026) திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி நிதியுதவித் திட்டம் (2024-2025)-ன்கீழ் ரூ.117.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை பயன்பாட்டிற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்லவித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருடந்தோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மாணவ, மாணவியர்கள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவருக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,375/- என்ற மதிப்பீட்டிலும், ஒரு மாணவியருக்கு வழங்கபடும் மிதிவண்டியின் விலை ரூ.4,250/- என்ற மதிப்பீட்டிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு 7,725 மாணவர்களுக்கும், 7,361 மாணவிர்களுக்கும் என 15,086 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.67/- கோடி மதிப்பீட்டிலும், 2022-2023-ஆம் ஆண்டு 3,275 மாணவர்களுக்கும், 6,054 மாணவியர்களுக்கும் என 9,329 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.48/- கோடி மதிப்பீட்டிலும், 2023-2024-ஆம் ஆண்டு 6,028 மாணவர்களுக்கும், 6,757 மாணவியர்களுக்கும் என 12,785 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.17/- கோடி மதிப்பீட்டிலும், 2024-2025-ஆம் ஆண்டு 8,237 மாணவர்களுக்கும், 9,393 மாணவியர்களுக்கும் என 17,630 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.8.50/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 54,830 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.26.82/- கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2025-2025) 7,604 மாணவர்களுக்கும், 9,322 மாணவியர்களுக்கும் என மொத்தம் 16,936 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.7.28/- கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 14.11.2025-அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் கட்டமாக 11-ஆம் வகுப்பு பயிலும் 145 மாணவர்களுக்கு ரூ.6,34,375/- மதிப்பீட்டிலும் மற்றும் 7 மாணவியர்களுக்கு ரூ.29,750/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 152 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6,64,125/- மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 228 மாணவர்களுக்கு ரூ.9,97,500/- மதிப்பீட்டிலும், 174 மாணவியர்களுக்கு ரூ.7,39,500/- என மொத்தம் 402 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.17,37,000/- மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ் வழியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் விளங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும், மாதந்தோறும் மாணவர்களை ”கல்வி இன்பச் சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டு கல்வியின் இன்றியமையாமை குறித்து விளக்கப்படுகிறது.
மேலும், படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 05.01.2026-அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அரசு கல்லூரி மற்றும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு 2321 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்கள் அனைவரும் பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் சிரத்தையுடன் தங்களுடைய கல்விக்காக உழைத்து வருவதை எண்ணி நன்றாக படித்து வருங்காலத்தில் ஏதாவதொரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கல்வி கற்க வேண்டும். மேலும், தங்களுடைய குறிக்கோளானது வானளாவிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதை நோக்கி முன்னேறி செல்ல முடியும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.ராஜேந்திரன், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருட்திரு.ஐ.ஜான்சன் எடின்பர்க் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.