The Honorable RD Minister laid the groundwork for the construction of a new community hall and issued free land titles.
செ.வெ.எண்: 37/2026
நாள்: 14.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாம்பிள்ளை கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,குழந்தைநேயப்பள்ளி ஊட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ் சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, சித்தரேவு கிராமத்திற்குட்பட்ட ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (14.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாம்பிள்ளை கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, குழந்தைநேயப்பள்ளி ஊட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ் சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் மூலம் மக்களுக்காக மக்களைத் தேடி சென்று பல்வேறு திட்டங்ளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிராமப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பாதாள சாக்கடை வசதி, குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பெண்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஆண்டுதோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து கடனுதவிகளை வழங்கி வருகிறார். இக்கடனுதவிகளை பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழுக்களாகச் சேர்ந்து சிறுதொழில்கள் ஆரம்பித்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 09.01.2026-அன்று ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.மூ.திருமலை, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன், திருமதி.பத்மாவதி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
