Close

The Hon’ble Food and Civil Supply Minister Pongal Celebration – Oddanchatram

Publish Date : 14/01/2026
.

செ.வெ.எண்:-43/2026

நாள்:-14.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (14.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் கிராமங்கள்தோறும் “சமத்துவப் பொங்கல்” திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதன் பேரில், இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் நகராட்சியில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றை தினம் இத்திருவிழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் நல்லாட்சி செய்து வந்தனர். அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம்” என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து, ” எம்மதமும் சம்மதம்” மற்றும் ”வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நோக்கில் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகள், இனங்கள், சாதிகள் இருந்தாலும் பிறப்பால் அனைவரும் உடன் பிறந்தோரே என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ”அறிவுசார் மையம்” அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ”அறிவுசார் மையம்” அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும், தூய்மையான நகராட்சிகளின் வரிசையில் ஒட்டன்சத்திரம் 11-வது இடத்தைப் பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் தூய்மையான நகராட்சிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.வெள்ளைச்சாமி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.