Pongal celebrated with art
செ.வெ.எண்:-47/2026
நாள்:-17.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார்.
திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் இன்று (17.01.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
எல்லா இடங்களிலும் நீங்கள் பார்திருப்பீர்கள், எல்லா இடங்களிலும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை போற்றும் வகையில் பல்வேறு வகையான விழாக்களில் மற்றும் கொண்டாட்டங்களிலும் தமிழர்கள் எவ்வாறு பொங்கல் திருவிழாவை கொண்டாடுகின்றார்களோ அதே மாதிரி வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி கொண்டு வருகிறார்கள். அதிலும் இன்றைய தினம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் மூன்றாவது நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலையோடு காணும் பொங்கலை கொண்டாடக்கூடிய மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திகழ்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளார்கள். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சி தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில் ஒரு முன்னோட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகம் செய்த தியாகிகள் மற்றும் போராட்ட வீரர்களின் நினைவாக பள்ளிக் குழந்தைகளின் காட்சிப்படுத்தலைப் பார்த்திருப்பீர்கள். எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ அதே அளவிற்கு நமது குழந்தைகளுக்கு பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், நாகரியத்தையும் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும்.
இந்நிகழ்ச்சியானது உலக சாதனைக்கு மட்டுமல்லாமல் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையும் இணைந்து நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
கலையுடன் காணும் பொங்கல் திருவிழா ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்வு நிகழ்ச்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து 77 பள்ளிகளிலிருந்து 1500 மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைஞர்கள் ஒருங்கிணைந்து பாரதியார் மற்றும் பாரதிதாசனின் பாடல் வரிகளுக்கு இசை நடனம் நிகழ்த்தும் ஆஸ்கார்ஸ் உலக சாதனை நிகழ்வு நேர்முகமாகவும், இணையவழியாகவும் நடைபெற்றது.
முன்னதாக, இசை நடனம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ், திரு.டி.வி.ஆர். இராமதாஸ், திரு.எம்.சி.வெங்கடேஸ்வரன், குருமார்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.