COLLECTOR – GDP
செ.வெ.எண்:-49/2026
நாள்:-19.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.01.2026) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 220 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், தம் உடல் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதூரை சேர்ந்த த.பெ. குமார் மற்றும் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் திரு.கோபிநாத் (வயது 29) என்பவர் கடந்த 17.01.2026-அன்று உயிரிழந்ததை தொடர்ந்து, தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக எழுதிக் கொடுத்தனர். அதன் பின்னர், அன்னாரின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த பெற்றோர்களின் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் உயிரிழந்தவரின் தாயாருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ஹென்றி பீட்டர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
