Science Festival—Awareness Rally
செ.வெ.எண்: 77/2026
நாள்: 27.01.2026
திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படவுள்ள
‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு இளைஞர்கள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் திருவிழா குறித்த நடமாடும் பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படவுள்ள ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு இளைஞர்கள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் திருவிழா குறித்த நடமாடும் பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் வருகின்ற 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் திருவிழாவில் 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து திருவிழா நடைபெறும் மைதானத்தில் அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்த வரவழைக்கப்படவுள்ளது. தென்தமிழகத்திற்கு இப்பேருந்து வருவது இதுவே முதன்முறையாகும்.
அறிவியல் திருவிழாவின் முதல்படியாக கடந்த 24.01.2026-அன்று அறிவியல் மாரத்தான் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த அறிவியல் மாரத்தான் போட்டியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தொழில்நுட்பத்துறையில் புதிது, புதிதாக கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. எனவே, வருங்காலத்தில் மாணவ, மாணவியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். அதனடிப்படையில், வருகின்ற 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பெற்றோர்கள் இந்த அறிவியல் திருவிழாவில் தங்களது குழந்தைகளை கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்க செய்வது என்பது அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அறிவியல் திருவிழாவினை இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கார்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.மாறன் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.