The Hon’ble Food and Civil Supply Minister – Patta (Oddanchatram)
செ.வெ.எண்:-95/2026
நாள்:-31.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை இன்று (31.01.2026) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,323 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வட்டத்தை சேர்ந்த 314 பயனாளிகளுக்கும் மற்றும் பழனி வட்டத்தை சேர்ந்த 484 பயனாளிகளுக்கும் என மொத்தம் 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும், ஆணை பிறப்பித்துள்ளார்கள். தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகளை ரூ.1088 கோடி நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 12.02.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மனுக்கள் அளிக்கலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் கடந்த 57 மாதங்களில் 3,256 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 348 புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் 117 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை வருகின்ற 04.01.2026-அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி வட்டங்களைச் சேர்ந்த 1600 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. இத்திட்டப்பணிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக எழை, நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.