Grievance Day Petition
செ.வெ.எண்:-02/2026
நாள்:-02.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.02.2026) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 636 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வெள்ளோடு கிராமத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், ஆவின் நிறுவனத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைத்திட முன்வைப்பு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு மாற்றுத்திறன் கொண்ட பயனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.50,000/-க்கான காசோலையினையும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 13.11.2025-அன்றும் மற்றும் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 14.11.2025-அன்றும் நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், குறள் வார விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நடத்தப்பட்ட குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 15 நபர்களுக்கும் மற்றும் குறள் சார்ந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 3 நபர்களுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், குறளாசிரியர் மாநாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட 30 நபர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுகுமாறன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ஹென்றி பீட்டர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) திரு.ஜெ.சிவகுமார், உதவி ஆணையர் (கலால்) திரு.பிரபு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.