Development Works – Collector Inspection ( Guziliamparai)
செ.வெ.எண்: 09/2026
நாள்: 05.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், குஜிலியம்பாறை ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டம் (COMPONENT OF POOLED ASSIGNED REVENUE SCHEME (SCPAR)) (2025-2026)-ன்கீழ்இ ரூ.568.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டட கட்டுமானப் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், மல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெல்லம்பறையில் கனிம வள நிதி திட்டம் (2024-2025)-ன்கீழ், ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ள கலைஞர் கனவு இல்லம் வீட்டின் கட்டுமானப் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், மல்லாபுரம் ஊராட்சியில் கனிம வள நிதி திட்டம் (2024-2025)-ன்கீழ், ரூ.55.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டடத்தின் கட்டுமானப் பணியினையும் மற்றும் மல்லாபுரம் நியாய விலைக் கடையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நியாய விலைக் கடையில் பணிபுரியும் பணியாளர்களிடம் நியாய விலைக் கடையில் ரேசன் பொட்களின் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆசிரியர் பெருமக்களிடம் பள்ளி மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து, பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும் கூடத்தில் மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, மதிய உணவினை தயாரிக்கும் பணியாளர்களிடம் தினந்தோறும் மதிய உணவு எத்தனை மாணவர்களுக்கு தயார் செய்யப்படுகிறது என்றும், எத்தனை மாணவர்கள் மதிய உணவினை சாப்பிடுகின்றனர் என்றும் கேட்டறிந்தார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தொடர்ந்து, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், மல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பால்வார்பட்டியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
(2025-2026)-ன்கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலையோர கால்வாய்களை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிகள் சரியாக வழங்கப்படுகிறதா என்றும், 100 நாள் வேலை பயனுள்ளதாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், டி.கூடலூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் மயானம் மற்றும் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், டி.கூடலூர் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டம் (2024-2025)-ன்கீழ், ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் மற்றும் பூங்கா அமைக்கும் பணியினையும், டி.கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட மடையப்பன்நாயக்கன்பட்டியில் நமக்கு நாமே திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் உணவுக் கூடம் அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், டி.கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட மடையப்பன்நாயக்கன்பட்டி நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நியாயவிலைக் கடையில் பொதுமக்களிடம் ரேசன் பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுவது குறித்தும், ரேசன் பொருட்களின் தரம் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மடையப்பன்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இதுவரை வழங்கப்பட்டுள்ள கறவை மாடுகள் கடனுதவி மற்றும் தங்க நகைக் கடன் கடனுதவி குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டதற்கான பராமரிப்பு பதிவேட்டினை பெற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தகுதியின் அடிப்படையில் கடனுதவிகள் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.ரவிக்குமார், குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அண்ணாதுரை, திருமதி.கற்பகம், செயற்பொறியாளர்கள் திரு.டெல்லிராஜ், திரு.முருகன், திரு.சித்தார்த்தன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.





