Chief Minister’s Comprehensive Health Insurance Scheme.
செ.வெ.எண்:-40/2026
நாள்:-15.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 67,148 நபருக்கு ரூ.81.23 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதேபோல், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் 23.07.2009-அன்று தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம், ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000 வரை கட்டணமின்றி சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், விதவைகள், ஆதரவற்றவர்கள், வயது முதிர்வு ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.
இத்திட்டத்தில் மொத்தம் 2,053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 வகையான நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், 12 அரசு மருத்துவமனைகளும், 34 தனியார் மருத்துவமனைகளும், 3 பரிசோதனை மையங்களும் மற்றும் 3 ஆட்டிசம் மையங்களும் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2022-2023-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 7,051 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.5.47 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவனைகளில் 8,963 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.15.01 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2023-2024-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 8,669 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.7.94 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவனைகளில் 9,780 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.14.00 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 9,954 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.8.53 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவனைகளில் 9,212 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.12.79 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டில் அரசு மருத்துவமனைகளில் 7,049 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக, ரூ.7.94 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவனைகளில் 6,470 நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றவர்களுக்காக ரூ.9.53 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 4,83,195 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 67,148 நபருக்கு ரூ.81.23 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைப் பெற்று பயனடைந்த பொதுமக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூரைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரி அவர்கள் வயது(45) என்பவர் தெரிவித்ததாவது:-
என் பெயர் ஈஸ்வரி, நான் வேடசந்தூர் வட்டம், அய்யலூரில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் சுப்பிரமணி கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். எனக்கு 4 மாதங்களுக்கு முன்னர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, இருதய வாழ்வு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு போதிய பணம் வசதி இல்லை. அதனால் மிகவும் கவலை அடைந்தோம். அப்போதுதான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற உறவினர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இத்திட்டத்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நான் சிகிச்சைக்காக சேர்ந்தேன். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, இருதய வாழ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவமனையில் என்னை நல்ல முறையில் கவனித்துக்கொண்டார்கள். சிகிச்சைக்குப் பின்னர் நான் நலமாக உள்ளேன்.
தற்போது, அனைத்து வீட்டு வேலைகளையும் என்னால் பார்க்க முடிகிறது. என்னைப்போன்ற ஏழைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏழைகளை பாதுகாக்கும் வகையில் மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என வேடசந்தூர் வட்டம், அய்யலூரைச் சேர்ந்த திருமதி ஈஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், புதுச்சத்திரம் அண்ணாநகரை சேர்ந்த திருமதி சித்ரா அவர்கள் வயது(42) என்பவர் தெரிவித்ததாவது:-
என் பெயர் சித்ரா. நான் புதுச்சத்திரம் அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் பாலன், விவசாயம் செய்து வருகிறார். நான் தினசரி தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வந்தேன். கடந்த சில மாதத்திற்கு முன்பு தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பராதவிதமாக கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைகளுக்கு சிசிச்சை மேற்கொள்ள சென்றேன்.
அப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணத்திற்கு என்ன செய்வது என்று கவலையுடன் இருந்தேன். அப்போதுதான், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற மருத்துவர் ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நான் சிகிச்சைக்காக சேர்ந்தேன். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள எனக்கு ஏற்பாடு செய்துஇ தண்டுவடம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் மருத்துவமனையில் என்னை நல்ல முறையில் கவனித்துக்கொண்டனர்கள். தற்போது நல்ல முறையில் எனது அன்றாட வேலைகளை பார்த்துகொள்ள முடிகிறது. தற்போது ஒவ்வொரு வாரமும் மருத்துவ பரிசோதனைக்கு சென்று வருகிறேன். எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இத்தகைய சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என புதுச்சத்திரம் அண்ணாநகரை சேர்ந்த திருமதி சித்ரா அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை, எளியோர்கள் மருத்துவ ரீதியாக சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரருகிறார்கள். தமிழக மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.