The Honorable Minister of Food and Civil Supplies – inaugurated the foundation stone laying and completed projects.
செ.வெ.எண்:-41/2026
நாள்:-16.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.51.56 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிஇ தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.51.56 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (16.02.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்,பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும்இ தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், 16 புதூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2024 – 2025)-ன்கீழ், ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 புதூர் தானியக் கிட்டங்கியையும், போடுவார்பட்டி ஊராட்சி பள்ளிக்கூட வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2022 – 2023)-ன்கீழ், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் காலனியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (2022 – 2023)-ன்கீழ்,ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் காலனியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் என மொத்தம் ரூ.51.56 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், 16 புதூர் ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்படாட்டு திட்டத்தின்கீழ், ரூ.18.10 இலட்சம் மதிப்பீட்டில் சுமைதாங்கி கப்பலப்பட்டி முதல் சுமைதாங்கி தேவத்தூர் சாலை வரை உள்ள தார்ச் சாலையினை (0.550 கி.மீ) மேம்படுத்தும் பணி, கொத்தயம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திட்டத்தின் கீழ், ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கும் பணி, கொத்தயம் ஊராட்சியில், பொதுப்பணித்துறை சார்பில், ரூ.42.00 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, கொத்தயம் ஊராட்சியில், நபார்டு (2025-2026)-ன்கீழ், ரூ.71.71 இலட்சம் மதிப்பீட்டில் கொத்தயம் சுடுகாடு முதல் வடக்கு டொம்பச்சி ஓடை வரை உள்ள தார்ச்சாலையினை (1.750கி.மீ) மேம்படுத்தும் பணி, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி ஊராட்சியில் 14-வது நிதிக்குழு மான்யம் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.17.79 இலட்சம் மதிப்பீட்டில் 30இ000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் மற்றும் இலவச வீட்டுனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சய்காந்தி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.தாஹிரா, திரு.குமரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.


