‘Coffee with Collector’
செ.வெ.எண்:-50/2025
நாள்:-16.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 09.02.2026 வரை 26 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர் 27 பேர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 55 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர், புத்தொழில் முனைவோர்கள் 35 பேர் மற்றும் ஏனைய பிற துறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (16.02.2026) இருபத்து ஏழாவது நிகழ்வாக திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவியர் 25 பேருடன் ‘Coffee with Collector’ கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது: திண்டுக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவின்போது நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்களாக சிறப்பான பங்களிப்பினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் உங்களுடைய ஒருங்கிணைப்புப் பணி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதன் மூலமாக பெறும் பாராட்டு மட்டுமல்லாது கிடைக்கின்ற அனுபவமும் முக்கியமானதாகும். அந்த அனுபவம் அடுத்தடுத்த பணிகளில் சிறப்பான திட்டமிடுதலை அமைத்துக்கொள்ள உதவும். சமூகத்திற்கு நீண்டகால பயன்களை விளைவிக்கக்கூடிய பணிகளில் தொலைநோக்கு பார்வையுடன் ஈடுபட வேண்டும். தேவையற்ற தயக்கம் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் எதிர்காலம் மற்றும் இலக்கு குறித்த தெளிவான பார்வை அவசியம். உணர்ச்சிப்பூர்வமாக சிந்திப்பதைவிட அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். நன்மை தரும் விக்ஷயங்களை தேடிப் பயில வேண்டும். உங்களுடைய தனித்துவமான திறன்களை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய வேண்டும். நல்ல ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் மீது கவனம் குவிக்க வேண்டும்.
நேர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் துணையாகக் கொள்ள வேண்டும். அவரவர் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்பினை அவசியம் பெற வேண்டும். சமூக ஊடகங்களை சரியான முறையில் நேர மேலாண்மையுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், மாணவியருடன் கலந்துரையாடி நாட்டுநலப்பணித் திட்டம் தொடர்பான அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார். மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவின்போது நாட்டுநலப்பணித் திட்ட தன்னார்வலர்களாக சிறப்பாகச் செயல்பட்டமைக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாணவியர் அனைவருக்கும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் மு.சண்முகப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.