The students express their gratitude to the District Collector.
செ.வெ.எண்:-78/2026
நாள்:-28.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவ/மாணவியர் நன்றி தெரிவிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தேர்வினை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர் எழுத உள்ளார்கள். இதன் பொருட்டு, கடந்த திங்கட்கிழமை (23.02.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியருடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் தன் இரு கண்கள் என அடிக்கடி கூறுவதை நினைவு கூர்ந்தார். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருவதையும், நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு முறையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி மாணவ/மாணவியரின் நலன் சார்ந்து புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், உயர்வுக்குப்படி, கல்லூரிக் கனவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதையும் எடுத்துக் கூறினார். இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் 82% ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 2025-26 ஆம் ஆண்டில் 99% ஆக உயர்ந்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். வரும் கல்வியாண்டில் 100% உயர் கல்வி சேர்க்கை பெறுவதை உறுதி செய்வதே மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய இலக்கு என்றும் தெரிவித்தார். அத்துடன் பொதுத்தேர்வு சார்ந்து பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 21,419 மாணவ, மாணவியருக்கும் தனித்தனியாக தபால் அட்டை மூலமாக வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட மாணவ/மாணவியர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களுக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். வாழ்த்துக் கடிதத்தில் “தம்பி மற்றும் தங்கைகளின் வெற்றிக்காக காத்திருக்கும் உங்கள் கலெக்டர் அண்ணன்…” எனக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கையொப்பமிட்டு இருந்தார். இக்கடிதத்திற்கு நன்றி தெரிவித்து வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ந.நந்தகுமார் கூறியதாவது: “எங்கள் வெற்றியே தங்களின் கனவு என்பதை உணர்ந்தேன். கல்வி மட்டுமே எவராலும் அழிக்க முடியாத ஆயுதம் என தாங்கள் சொன்ன சொற்களை ஏற்றுக்கொண்டேன். எங்களின் வெற்றியை கண்டிப்பாக தங்களுக்குப் பரிசளிப்போம்” என்றார்.
![]() |
![]() |
![]() |
சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் K.திவ்யா எனும் மாணவி கூறுகையில், “திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எங்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதற்கு மிக்க நன்றி. மேலும் அவர், தேர்வை திருவிழா போல் எதிர்கொள்ள வேண்டும் என்றும், தேர்வுக்கு செல்வதற்கு முன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் வழங்கிய அறிவுரை எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது” என்றார். இதே பள்ளியைச் சேர்ந்த அகிம்சா அமுதன் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எங்களுக்கு உன்னால் முடியும், உலகை வென்றிடு என்று வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதற்கு மிக்க நன்றி. தேர்வுக்கு நாங்கள் நன்றாக தயார் செய்துள்ளோம். தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிய அறிவுரை பேருதவியாக உள்ளது” என்றார்.திண்டுக்கல் பழனிச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வே.ஜேஸ்வா ஆக்னஸ் தெரிவித்ததாவது: “தனது பணிகளுக்கு நடுவே மாவட்ட ஆட்சித்தலைவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பிய வாழ்த்து அட்டை ஊக்கத்தையும், உத்வேகத்தையும் தருகிறது. ‘நம்பிக்கையுடன் படியுங்கள், உற்சாகத்துடன் செல்லுங்கள்’ எனும் வாக்கியம் இன்னும் நன்றாக படிக்க ஊக்குவிக்கின்றது. நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த செ.நிவாஸ் எனும் மாணவன் பேசுகையில், இதே பள்ளியைச் சேர்ந்த செ.நிவாஸ் எனும் மாணவன் பேசுகையில், “முடியாது என்பது முற்றுப்புள்ளி, முடியும் என்பது வெற்றிப்புள்ளி – என மாவட்ட ஆட்சித்தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது ஆசிர்வதித்து உற்சாகமூட்டுவதாக உள்ளது, நன்றி” என்றார்.பழனியைச் சேர்ந்த மாணவி ச.பவித்ரா குறிப்பிடுகையில், மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து வாழ்த்துக் கடிதம் வந்துள்ளது என்பதனைக் கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய கையொப்பத்துடன் கூடிய வாழ்த்து அட்டையை கையில் வாங்கிய போது மிகவும் பெருமையாக இருந்தது. அத்துடன் கையொப்பத்திற்கு மேலே ‘உங்கள் கலெக்டர் அண்ணன்’ என குறிப்பிட்டிருந்தது மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. திண்டுக்கல் மாவட்டத்திற்கான ஆட்சித்தலைவர் என்பதோடு அல்லாமல் ‘உங்கள் கலெக்டர் அண்ணன்’ என குறிப்பிட்டதன் மூலமாக மாணவ/மாணவியரான எங்கள் மீது அவர் கொண்டுள்ள அன்பும், பரிவும் அவரை எங்கள் உடன்பிறந்த சகோதரராகவே பார்க்கத் தோன்றுகிறது என்றார். மேலும், அனைத்து தேர்வுகளையும் நன்முறையில் எழுதி நிச்சயமாக சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவோம் என உறுதிபடக் கூறினார்.வாழ்த்து மடல் அனுப்பியதற்காக கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.


