The District Collector directly inspected the facility where the Plus 2 test will be held.
செ.வெ.எண்:-01/2026
நாள்:02.03.2026
திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்குகின்றன. திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத 21,391 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. அதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் 21,052 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 339 பேர் வருகை புரியவில்லை.தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் நிலையான படை அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையிலும் பறக்கும் படை அமைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று தமிழ் தேர்வு என்பதால் ஆர்வமுடன் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த மாணவர்களும் தேர்வினை எழுதாமல் இருக்க கூடாது என்ற முறையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு குறித்து அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. காணொலிகாட்சி மூலமாக தேர்வு எழுதுவது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 88 தேர்வு மையங்களிலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ப.உஷா அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.