Close

The Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.

Publish Date : 04/03/2026

செ.வெ.எண்:-11/2026

நாள்:-03.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (03.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 1 நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக நிறைவு பெற்றுள்ள பணிகளை கடந்த 13.02.2026-ஆம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் மகளிர் உரிமைத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13.02.2026-அன்று மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விலை கிடைக்காத நேரத்தில் சேமித்து வைக்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரத்தில் குளிர் சாதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மூலமாக ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கேதையறும்பில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு வருகிறது. முருங்கை உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணமாக முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒட்டன்சத்திரம் தொகுதியில் மார்க்கம்பட்டியில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலைமச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கும் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் கடந்த 08.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாயவிலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.208.24 கோடி வழங்கப்பட்டது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகரில் ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.230.00 இலட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மற்றும் ரூ.500.05 இலட்சம் மதிப்பீட்டில் சின்னக்குளம் மறுகால் ஓடை அமைக்கும் பணி, ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட தாராபுரம் சாலை முதல் சின்னக்குளம் வரை ரூ.120.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் ஓடை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் திருமதி.சுவேதா, ஒட்டன்சத்திரம் நகராட்சி செயற்பொறியாளர் திரு.சுப்பிரமணிய பிரபு அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.