The District Collector spoke with students who are about to take the 10th grade public exams via video conferencing.
செ.வெ.எண்: 13/2026 நாள்: 04.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 23,538 மாணவ, மாணவிகளுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 349 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (04.03.2026) கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். நிதிநிலை அறிக்கையிலும் ஒவ்வொரு முறையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி மாணவ/மாணவியரின் நலன் சார்ந்து புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை புதிய உச்சம் தொட்டு வருகிறது. வருகின்ற 11.03.2026-அன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வினை எழுதவுள்ள உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், பாராட்டுகள்.வாழ்க்கையில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. நீங்கள் எழுதவிருக்கும் முதல் அரசுப் பொதுத்தேர்வு 10-ஆம் வகுப்பு தேர்வுதான். எனவே, இது உங்களால் மறக்கமுடியாத ஒரு புது அனுபவம் ஆகும். இந்த முதல் படியில் சிறப்பாக அடியெடுத்து வையுங்கள்.
11-ஆம் வகுப்பில் என்ன பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது 10-ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களைப் பொருத்தே அமையும். சிறப்பாக படித்தால் 10-ஆம் வகுப்பில் தற்சமயம் மொழிப்பாடம் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற முடியும். கடந்த ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் பெற்ற தேர்ச்சி சதவீதத்தை விட இந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி சதவீதம் பெற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இதற்காகவே நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கற்றல்-கற்பித்தல் திறம்பட நடைபெறும் பொருட்டு தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்துதல், மாணவ/மாணவியருக்கான குறைந்தபட்ச கற்றல் கையேடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகளால் 2024-2025-ஆம் ஆண்டில் 82% ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 2025-2026-ஆம் ஆண்டில் 99% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. நீங்கள் எழுதவிருக்கும் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்ய வேண்டும். அதேநேரம் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல என்பதனையும் கவனத்தில் கொண்டு பயமோ பதட்டமோ இன்றி படிக்க வேண்டும். உழைப்பு மற்றும் முயற்சியின் மீது கவனம் குவிக்க வேண்டும். படித்ததை விடைத்தாளில் வெளிப்படுத்தும் நேரம் இது. உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் உடல்நலம் இரண்டிற்கும் சம அளவில் முக்கியத்துவம் தர வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதனை தேர்விலும் வெளிப்படுத்த வேண்டும். தேர்வு நாளில் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளையும் உணவு உண்பதும், தேவையான அளவு குடிநீர் பருகுவதும், போதுமான அளவு ஓய்வு எடுப்பதும் அவசியம்.
ஒரு தேர்வுக்கும், அடுத்த தேர்வுக்குமான இடைவெளி நாட்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும். உங்கள் நண்பர்களையும் ஊக்குவித்து படிப்பதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் நிறைவேற நன்றாகப் படிக்க வேண்டும். அனைத்து பாடங்களையும் அவசியம் திருப்புதல் செய்தல் வேண்டும். தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மேற்பார்வையில் பள்ளிக்குச் சென்று குழுவாக இணைந்து படிப்பது சிறந்த பலன்களை வழங்கும். இதனை தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் படிக்க வேண்டும். கோடைகாலம் துவங்க உள்ளதால் காய்ச்சல், அம்மை உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை போதிய அளவு எடுத்துக்கொள்வதோடு, சுகாதாரமான குடிநீரும் பருக வேண்டும். இரவு நெடுநேரம் விழுத்திருந்து படிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பாடங்களுக்கு ஆசிரியர் உதவியுடன் சிறப்புப் பயிற்சிகளும், திருப்புதலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அனைவரும் பொதுத்தேர்வு அன்று விடுப்பு ஏதும் எடுக்காமல், பொதுத்தேர்வு வாய்ப்பை நழுவ விடாமல் அவசியம் பங்கேற்க வேண்டும். அவரவர் நண்பர்களும் தேர்வுக்கு வருகை புரிவதை உறுதி செய்தல் வேண்டும். இதன் பொருட்டு பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர்களும் எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். தேவையான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்குவர். தேர்வு காலஅட்டவணை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். எழுதி முடித்த தேர்வுகள் பற்றி தேவையற்ற கவலை கொள்ளாமல் அடுத்த தேர்விற்கு உற்சாகமுடன் தயாராக வேண்டும். மாவட்ட நிர்வாகம் நீங்கள் அனைவரும் சிறப்பான மதிப்பெண்களுடன் 100% தேர்ச்சி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை தேடித்தர உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
கலந்துரையாடலின்போது, மாணவ, மாணவிகள் தேர்வு பயத்தை போக்கும் வழிமுறைகள், ஞாபக சத்தியை அதிகரித்தல், மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை பெறுதல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது, 11-ஆம் வகுப்பில் என்ன பாடப்பிரிவைத் தேர்வு செய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திரு.த.ஜான் பிரிட்டோ, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.த.கருணாநிதி, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அந்தந்த பள்ளிகளில் இருந்தவாறு கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் காணொலிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.