Close

An appreciation ceremony for sanitation personnel.

Publish Date : 06/03/2026

செ.வெ.எண்:-21/2026

நாள்:-05.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தைப் பூசத் திருவிழாவினை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தைப் பூசத் திருவிழாவினை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழாவினை இன்று (05.03.2026) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 300 தூய்மைப் பணியாளர்களுக்கும், தொப்பம்பட்டியைச் சேர்ந்த 306 தூய்மைப் பணியாளர்களுக்கும், கீரனூர் பேரூராட்சியை சேர்ந்த 25 தூய்மைப் பணியாளர்களுக்கும், ஒட்டன்சத்திரம் நகராட்சியைச் சேர்ந்த 150 தூய்மைப் பணியாளர்களுக்கும் என மொத்தம் 781 தூய்மைப் பணியாளர்களை கொளரவித்து நடைபெற்ற விழாவில், மதிய உணவுடன் 1 நபருக்கு தலா அரிசி – 5 கிலோ, பருப்பு – 1 கிலோ, எண்ணெய் – 1 லிட்டர், கோதுமை ரவை – 1 கிலோ, உப்பு – 1 கிலோ, சர்க்கரை – 1 கிலோ என்ற அடிப்படையில் தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலன் கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2007-ஆம் ஆண்டு “தூய்மை பணியாளர் நல வாரியம்” அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி. கல்வி உதவித்தொகை. திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி. கண்கண்ணாடி வாங்க நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம், வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்.

மேலும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தி
14.08.2025-அன்று தூய்மைப் பணியாளர்களுக்கான முதலமைச்சரின் உணவுத் திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு வழங்கும் திட்டம். பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகை ஆகிய 6 புதிய சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.5,000-ஆக உயர்த்தி வழங்கினார். தற்போது, தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தைப் பூசத் திருவிழாவினை முன்னிட்டு இரவு, பகல் பாராமல் சிறப்பாக பணியாற்றி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்ததை கொண்டாடும் வகையில் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான விழாவாக இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 141 நகராட்சிகள் உள்ளன. இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியானது தூய்மையான நகராட்சிகள் வரிசையில் 11-வது இடத்தை பெற்றுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுத்தமாக வைத்திருப்பதை போன்று தங்களது ஊராட்சிப் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தூய்மையான ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வரிசையில் இடம் பெறுவதற்கு தூய்மைப் பணியாளர்களுடன் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி.சுவேதா அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பொறியாளர் திரு.சுப்பிரமணிய பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.தாஹிரா, ஒட்டன்சத்திரம் நகர்மன்றத் தலைவர் திரு.திருமலைசாமி, துணைத்தலைவர் திரு.வெள்ளைசாமி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.