Closing Ceremony of the State-Level Science, Technology, and Innovation Festival 2026.
செ.வெ.எண்: 04/2026
நாள்: 03.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து
நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (03.02.2026) மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்ந்து, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவியல் சார்ந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாணவ, மாவணவிர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வின் நிறைவு விழா நாளில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவியல் திருவிழாவை கண்காட்சி என்றோ, திருவிழா என்றோ சொல்வதைக் காட்டிலும் அறிவியல் சார்ந்த அடித்தளத்தை அமைக்கக்கூடிய ஓர் இடம் என்று சொல்வதுதான் சரியாகும்.
மேலும், இந்த அறிவியல் திருவிழா கடந்த 28.01.2026-அன்று தொடங்கப்பட்டு சிறப்பாக 7 நாட்கள் நடைபெற்றுள்ளன. இத்திருவிழாவில் 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 40 படைப்புகள் சிறந்த கண்டுபிடிப்புகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்த அறிவியல் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என மொத்தம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இஸ்ரோவின் நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்டந்தோறும் ”கலை திருவிழா” நடத்தப்பட்டு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடத்தப்பட்ட கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு ”கலையரசன், கலையரசி” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலை திருவிழாவினை போன்று, அறிவியல் திருவிழாவை மாவட்டந்தோறும் நடத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நான் இன்றைய தினம் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டபோது, மாணவ, மாணவியர்கள் அவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் குறித்து அளிக்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. மேலும், அறிவியல் திருவிழா நடைபெறும் மைதானத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களிடம் மாணவ, மாணவியர்கள் உரையாடுவது போன்று ”செல்பி பாயிண்ட்” வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடத்தப்படும் அறிவியல் திருவிழாக்களில் இளைய தலைமுறையினராக விளங்கும் மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் தங்களிடம் மாணவ, மாணவியர்கள் உரையாற்றுவதற்கு போன்று ”செல்பி பாயிண்ட்” வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும். மாணவ, மாணவியர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாவட்டத்தின் இயற்கை வளங்கள் குறித்தும், அந்த மாவட்டம் எதற்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாக விளங்கி வருகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். உதாரணமாக, ஒட்டன்சத்திரம் என்றால் காய்கறி உற்பத்தியிலும், நத்தம் என்றால் மாம்பழம் உற்பத்தியிலும், வத்தலக்குண்டு என்றால் வெற்றிலை உற்பத்தியிலும், சிறுமலை என்றால் மலை பயிர்கள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. இவற்றை மாணவ செல்வங்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு இந்த பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கு என்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் கண்டு பிடிக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.
மாணவ, மாணவியர்கள் பெரிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தால் மட்டுமே அறிவியல் விஞ்ஞானியாக முடியும் என்று என்ன கூடாது. சிறியதாக ஏதாவதொரு கண்டுபிடிப்பு கண்டு பிடிக்கலாம் என்று மனதில் எண்ணினாலே அந்த நிமிடத்திலிருந்து நீங்களும் ஒரு அறிவியல் விஞ்ஞானிதான். எனவே, மாணவ, மாணவியர்கள் நாம் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்பானது கடைசி மனிதனையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். மாணவ செல்வங்களாகிய நீங்கள் வருங்காலத்தில் என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அந்த ஆசைகள் அனைத்தும் உங்களுடைக்கு கிடைப்பதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் தான் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. எனவே, கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்குள் இருக்கும் அறிவியல் சார்ந்த தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த அறிவியல் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் அடிப்படையில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் திண்டுக்கல் மாவட்டம் சிறந்த மாவட்டமாக விளங்கும் என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாடு புதிது புதிதாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்து வரும் நாடாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும், தற்போதும் கூட விண்வெளியில் விமானம் சென்றால் நாம் ஒரு நிமிடம் நின்று அந்த விமானத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளம் தோன்றும். இந்த எண்ணம்தான் அறிவியல் கண்டுபிடிப்பான சாதனையாகும். இதனை மாணவ, மாணவியர்கள் அனைவரும் உணர்தல் வேண்டும் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், கார்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு.மாறன் நாகராஜன், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா, திண்டுக்கல் அறிவியல் திருவிழா திட்ட இயக்குநர் பேரா.முனைவர் ரெ.மனோகரன், எம்.எஸ்.பி.பள்ளியின் தாளாளர் திரு.முருகேசன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.