Coffee with Collector.
செ.வெ.எண்:-21/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – புத்தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 19.01.2026 வரை 25 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவஃமாணவியர் 27 பேர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 55 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (09.02.2026) இருபத்து ஆறாவது நிகழ்வாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 35 புத்தொழில் முனைவோர்களுடன் ‘Coffee with Collector’ கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு கிராமங்கள்தோறும் புத்தொழில் முனைவுக்கான சூழலை வலுப்படுத்தும் நோக்கோடு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் (StartupTN) மூலமாக ‘கிராமம்தோறும் புத்தொழில்’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கிராம புத்தொழில் குழுக்கள் துவங்கி அவர்களுக்குத் தேவையான தொழில் வழிகாட்டுதல்கள் வழங்குதல்இ விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புத்தாக்க சிந்தனைகளை அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான நிதித்திட்டங்கள் என அனைத்து உதவிகளும் StartupTN மூலம் வழங்கப்படும். இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடைப்பட்டி, எல்லைப்பட்டி, குட்டத்துப்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கான ‘கிராம புத்தொழில் குழுக்கள் (Village Startup Community) இன்று துவக்கி வைக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தாக்க மற்றும் புத்தொழில் சூழலை வலுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் StartupTN மூலமாக பயிற்சிகள் வழங்கப்படும். திண்டுக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தாக்க சிந்தனைகளை புத்தொழில் நிறுவனங்களாக தொடங்குவதற்கு ஆலோசனைகளும், உதவிகளும் வழங்கப்படும்.
உங்கள் கனவுகளை நனவாக்க முயலுங்கள், எந்தவொரு புதிய முன்னெடுப்பிலும் உடல் நலன் மற்றும் மன நலன் சார்ந்த சமூக அக்கறையுடன் செயல்படுங்கள் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புத்தொழில்முனைவோர்களின் இலக்கு, தேவைப்படும் உதவிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இந்தநிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.வினோதினி, இ.ஆ.ப., காவல் உதவி கண்காணிப்பாளர் (பயிற்சி) செல்வி.கா.நேஹா, இ.கா.ப., தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் இயக்க மதுரை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் திரு.க.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.