Collector inspection – Road palani
செ.வெ.எண்:-99/2025
நாள்:-29.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி சாலையில் ஆயக்குடி பகுதியில் சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலையில் ஆயக்குடி பகுதியில் சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் – பழனி சாலையில் ஆயக்குடி காவல் நிலையம், பழைய ஆயக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயக்குடி கொய்யா மார்க்கெட், புதுஆயக்குடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி சாலையில் ஆயக்குடி பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதுடன் பலர் காயமடைந்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் சாலையை அகலப்படுத்துவது, வேகத்தடைகள் அமைப்பது, வளைவுப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைப்பது, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் மின் விளக்குகள், ஒளிரும் அறிவிப்பு பலகைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி காவல் துணை கண்காணிப்பாளர் திரு..ஸ்ரீ.தனஞ்சையன், பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஸ்ரீதர், உதவிப்பொறியாளர்(நெடுஞ்சாலைத்துறை) திருமதி கலாவதி மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.