Close

Collector Inspection – Unga Kanava Sollunga Scheme.

Publish Date : 21/01/2026
.

செ.வெ.எண்: 56/2026

நாள்: 20.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

“உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு பகுதியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளை இன்று (20.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், பொதுமக்களின் தேவைகளை நேரில் சென்று கேட்டறிந்து நிறைவேற்றும் வகையிலும் ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” ”உங்களுடன் ஸ்டாலின்” போன்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த 09.01.2026-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்இ திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 6,40,304 குடும்பங்களை கணக்கெடுப்பு செய்யும் பணியில் 1,545 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஊரகப்பகுதியில் உள்ள 4,96,994 குடும்பங்களை கணக்கெடுப்பு செய்யும் பணியில் 1252 தன்னார்வலர்களும், நகரப்பகுதியில் உள்ள 1,43,310 குடும்பங்களை கணக்கெடுப்பு செய்யும் பணியில் 293 தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, கனவு அட்டை மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு இணைய பயன்பாட்டிற்காக SIM கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர். தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.

எனவே, “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் விண்ணப்ப படிவத்தினை வழங்குவதற்கும் மற்றும் பெறுவதற்கும் தன்னார்வலர்கள் தங்கள் வீட்டிற்கு வருகைபுரியும்போது உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களில் பொதுமக்கள் தவறாது தங்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்து வழங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களிடம் பணிகளின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மலரவன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.