Community baby shower ceremony.
செ.வெ.எண்:- 18/2026
நாள்:-09.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சின்னாளப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி விஜய் மஹாலில் இன்று(09.02.2026) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார்.
இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து தெடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனையே மிக முக்கியமான நோக்கமாக கொண்டுஇ சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஆத்துார் மற்றும் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பாக 286 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரண்டு வட்டாரங்களில் உள்ள குழந்தைகள் மையங்கள் மூலமாக சுமார் 1,262 கர்ப்பிணிகள், 1,106 பாலுாட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 15,861 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், அதில் அனைத்திலும் உச்சமாய் இருப்பது தாய்மை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரப்பிரசாதம் மற்றும் மறுபிறப்பாகும். தாய்மை ஒரு பெண்ணுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஆனாலும், எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும் தன் குழந்தையை சுமப்பதை ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள். ஆனால், ஒரு தாய் ஒரு குழந்தையை கருவுற்ற முதல் பெற்று எடுப்பதற்குள் பல்வேறு சிறமங்களுக்கு உள்ளாகிறார்கள்.ஆரோக்கியமான குழந்தை உருவாகவும், சுகப் பிரவசம் நிகழவும், கருவுற்றிருக்கும் தாயின் உடல் மற்றும் மனநிலை நல்ல நிலையில் இருப்பது அவசியம்.
நம்முடைய உடலும், மனமும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. மனதில் ஏற்படும் மாற்றங்கள், முக்கியாக கவலைகள் உடலையும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனதையும் பெரிதும் பாதிக்கின்றது.
இதற்கு, பெண்கள், திருமணத்திற்கு முன்பே அதாவது, வளர் இளம் பருவத்திலேயே ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். திருமணம் நிச்சயமானதில் இருந்தாவது தனி ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு பெண்ணும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் திருமணம் ஆனவுடன் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கர்ப்பிணி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதால் குழந்தை பேற்றுக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வது நல்லது. மாறிவரும் சூழலில் கர்ப்பிணிப் பெண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன் சுகாதாரத்துறையின் மூலம் தாய்மார்களுக்கு சுகாதார பெட்டகம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியம் மற்றும் அக்கருவினை சுமக்கும் தாயின் ஆரோக்கியம் மேம்பட தேவையானவற்றை கவளிக்க வேண்டியது கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் மிகப்பெரிய கடமையாகும். அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான, அறிவுள்ள வாரிசு அவர்களுக்கு கிடைக்கும்.
இதனிடையே கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தவும் அவர்களின் மன மகிழ்ச்சி மேம்படுத்தவும் சமுதாய வளைகாப்பு வருடந்தோறும் நடத்தபட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் இவ்விருவட்டாரங்களில் 200 ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆண்டு வரை 7,650 ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.
பெண்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், சின்னாளபட்டி செயல் அலுவலர் திருமதி.இளவரசி, ஆத்தூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ரா.வாசுகி, ரெட்டியார்சத்திரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி.ரா.மகாலட்சுமி, சின்னாளபட்டி பேரூராட்சி தலைவர் திருமதி.பிரதீபா கனகராஜ், துணை தலைவர் திருமதி.ஆனந்தி பாரதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.