Close

DDAWO DEPT – Meeting

Publish Date : 15/12/2025
.

செ.வெ.எண்: 38/2025

நாள்: 13.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தொடங்கி வைத்து, 568 பயனாளிகளுக்கு ரூ.61,69,657 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமினை இன்று (13.12.2025) திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, 568 பயனாளிகளுக்கு ரூ.61,69,657 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியின் மூலம் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மறுசீரமைக்கப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது:-

அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுதிறனாளிகளுக்கான பல்வேறு உபகரணங்கள் தயார் செய்யப்பட்டு இதுபோன்ற முகாம்கள் நடத்தி தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 14 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களில் மருத்துவக் குழுக்களை ஈடுபடுத்தி முறையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மீது தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாற்றுதிறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பார்வை திறனற்ற மாற்றுதிறனாளிகள் சிம் கார்டு வாங்குவதில் இடர்பாடுகள் உள்ளன என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில், தற்போது சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் கைரேகை மற்றும் கண்களை புகைப்படம் எடுத்துதான் சிம் கார்டு வழங்கப்படுகிறது. மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை மற்றும் ஆதார் கார்டு வழங்கினால் சிம் கார்டு வழங்குவதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் முன் வந்துள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் 568 பயனாளிகளுக்கு ரூ.61,69,657 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறதாவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முகாம்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தொடர்ந்து, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வேண்டி அதிகளவில் மனுக்கள் வழங்குகின்றனர். 60 சதவிகிதத்திற்கும் மேல் மாற்றுதிறன் கொண்டவர்கள் என்பதை உறுதி செய்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் விதிமுறைகளின்படி வாகனம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசின் வாயிலாகவும் மாற்றுதிறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறன் கொண்டவர்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சி.தங்கவேலு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் திரு.க.தாமோதரன் அவர்கள் ஆகியோர் உட்பட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசு சாரா நிறுவன உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.