Development Works – Collector Inspection (Vedasandur)
செ.வெ.எண்: 61/2025
நாள்: 21.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (21.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இ.சித்தூர் நரிக்குறவர் காலனியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் 16 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும், இ.சித்தூர் நரிக்குறவர் காலனியில் வசிப்பவர்களிடம் தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிடக் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்கக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர், மாணவ, மாணவியர்களுக்கு தயாரிக்கப்படும் சத்துணவு கூடத்தினை நேரில் ஆய்வு செய்து, மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்களிடம் தினந்தோறும் பள்ளியில் மதிய உணவருந்தும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, உணவருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிக்கு வழங்கப்பட்ட பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சீதாலட்சுமி, திரு.சரவணன், உதவிப் பொறியாளர் திரு.பாலன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
