Close

DRO Certificate issued

Publish Date : 26/11/2025
.

செ.வெ.எண்:-98/2025

நாள்: 24.11.2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் பணிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டணூத்து கிராமம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் தையல் திறன் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டணூத்து கிராமம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் 04.08.2025 முதல் நடைபெற்ற தையல் திறன் பயிற்சி 45 நாட்கள் / 300 மணி நேரம் பயிற்சி 10.10.2025 அன்று தையல் திறன் பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ”திறனகம்” அலுவலகத்தில் தையல் திறன் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் இன்று(24.11.2025) சான்றிதழ்களை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்கள் திறனுக்கேற்ற தொழில்துறை வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் திட்டம் தான் வெற்றி நிச்சயம் திட்டம். வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகள், தொழில்துறைகளால் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கான ITI/ Accounting பயிற்சிகள், சுயதொழில் / தொழில் முனைவோர் வளர்ச்சி சார்ந்த பயிற்சிகள், ஐடிஜ/ பாலிடெக்னிக் / விவசாய அறிவியல் மையம் (KVK) தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் / மீன்வள பல்கலைக்கழகம் போன்ற அரசு நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிலைகளில் தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகளின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகள் ஒருமாத கால பயிற்சி அல்லது 15 நாள் பயிற்சி என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிகளின் வாயிலாக பணிகள் கிடைத்து பணியாற்றும் போது ஒரு நல்ல பணியாளராக விளங்க முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் கல்வி பயின்று ஆண்டுதோறும் 15,000-க்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். நிறைய படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாததால் கிராமங்களில் கிடைக்கும் ஏதாவதொரு ஒரு வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் படித்து முடித்தவுடன் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் பணிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டமானது, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புத் திட்டத் செயலாக்கத் துறையின் கீழ், வெற்றி நிச்சயம் திட்டமானது திறனகம் என்ற பெயரில் மாவட்ட திறன் மையம் செயல்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு எதிரில் ”திறனகம்” என்ற பெயரில் இயங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 79 வகையான கம்பெனிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசு மற்றும் தனியார்துறை திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை வழங்க ஆர்வுமுள்ள பல்வேறு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து திறன் பயிற்சி வழங்கலாம். திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அந்நிறுவனங்களின் திறன் பயிற்சி செலவினை அரசே ஏற்கும். பள்ளி, கல்லூரி படிப்பை தொடர முடியாதோர், 10வது/ 12 வது / ஐ.டி.ஐ / டிப்ளமோ முடித்து வேலை தேடுவோர், வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், தொழில்துறை சார்ந்த திறன்களை மேம்படுத்த விரும்பும் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வெற்றி நிச்சயம் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெறுபவர்களுக்கு திறன் பயிற்சியுடன் ஊக்கத்தொகையாக ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விதிமுறைகளுக்குட்பட்டு கட்டணமில்லா உணவு மற்றும் தங்குமிடம் வசதி உண்டு. எல்லோருக்கும் எல்லாம் வெற்றி நிச்சயம் என்பதை எளிதாக்க vetri nichayam மொபைல் app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணமில்லா திறன் பயிற்சி பெற்று, உங்கள் திறனுக்கேற்ற வேலையில் சேர இந்த QR கோடை ஸ்கேன் செய்தும் அல்லது thiranagamdindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்தும் பயனடையலாம். திறன் பயிற்சி பெற விரும்பும் வேலைநாடுனர்கள் மாவட்ட திறன் மையத்தினை நேரடியாகவும், மின்னஞ்சலில் குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலினை பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.