Close

EDUCATION LOAN MELA

Publish Date : 01/12/2025
.

செ.வெ.எண்:-113/2025

நாள்:27.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் இன்று (27.11.2025) நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பல்வேறு துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்லவித் துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மேலும், இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். மேலும், தமிழ் வழியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு“ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு படித்து முடித்தவுடன் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு “கல்லூரி கனவு“ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 20,550 மாணவ, மாணவியர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களையும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 99.31 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யும் வகையில் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்விக் கடன் முகாம்களை நடத்திட உத்தரவிட்டதன் பேரில் மாவட்டந்தோறும் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும், கல்விக்கடன் கோரி இணையதளம் வாயிலாக சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இதுபோன்ற கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில், கடன் திட்டங்கள், கடனுதவிக்குத் தேவையான ஆவணங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், உயர் கல்வியில் பொறியியல், மருத்துவம், வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணாக்கர்கள் கல்விக் கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.33.00 கோடி மதிப்பீட்லான கல்விக்கடன்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 2,000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50.00 கோடி மதிப்பீட்லான கல்விக்கடன்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 881 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.26.92 கோடி மதிப்பீட்லான கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர்கள் கல்விக்கடன் பெறுவதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைதளம் www.vidyalakshmi.co.in மூலம் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்று பயனடையலாம்.

மேலும், மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களின் கல்லூரி படிப்போடு, பொது அறிவினையும் வளர்த்துக்கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் நாம் நல்ல முறையில் கல்வி பயின்று ஏதாவதொரு துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கல்வி பயில வேண்டும். மாணவ, மாணவியர்கள் அனைவரும் நல்ல முறையில் பயின்று எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பதோடு மட்டுமல்லமால் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 154 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.41 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்குவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உயர்கல்வி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.