Farmer Registry Camp
செ.வெ.எண்: 60/2026
நாள்: 23.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் நில பதிவில் தனித்துவ அடையாள எண் (FARMERS REGISTRY) பதிவேற்றம் செய்திட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களுக்கு ஓர் முக்கியமான செய்தி. தங்கள் நிலத்தினை நிலப் பதிவில் பதிவேற்றம் (Farmers Registry) செய்ய தற்பொழுது சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனைத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக வேளாண்மை துறையைச் சார்ந்த அனைத்து நிலைக்கான அலுவலர்களும் தற்பொழுது இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நமக்கு எப்படி ஆதார் எண் இன்றியமையாததோ, அதேபோல நிலத்திற்கான ஆதார் எண் போன்ற நிலப் பதிவேற்ற வலைதளத்தில் (FR) பதிவு செய்து இதற்கான சிறப்பு எண்ணைப் பெற்றுக் கொள்ளவும். இதற்கான சிறப்பு முகாம் 22.02.2026 முதல் 26.02.2026 வரை நடைபெறும். இந்த சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி தங்களின் நிலத்தினை உடனே பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தங்களது பட்டா, ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வேளாண், தோட்டக்கலை அலுவலர்களை அணுகி உடன் தனித்துவ அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு அத்திட்ட உதவி தொடர்ந்து கிடைத்திட உடனே இந்நில பதிவினை செய்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.