Close

GYM Inauguration – Function

Publish Date : 10/01/2026
.

செ.வெ.எண்: 18/2026

நாள்: 09.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை இன்று 08.01.2026-அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 2021-2022-ஆம் ஆண்டின் சட்டமன்ற பேரவை நிதி அறிக்கையின் கீழ் கிராமபுற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாகவும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துகின்ற ஒரு வளர்ச்சி மையமாக மாற்றுகின்ற வகையில் அரசின் முதன்மை திட்டமாக அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விளையாட்டுத் திறனை விரிவுபடுத்துகின்ற வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட விளையாட்டரங்கம், நிலக்கோட்டை மற்றும் நத்தத்தில் சிறுவிளையாட்டரங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறுவிளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, ஒரு மாணவிக்கு ஒரு நாளுக்கு ரூ.250 வீதம் உணவு மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவிக்கு ஒரு நாளுக்கு ரூ.350 வீதம் உணவு மானியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. விடுதி மாணவிகளுக்கு சத்தாண உணவுகள் வழங்கப்படுகிறது. நாள்தோறும் அசைவ உணவு, பருவ கால பழ வகைகள், உலர்ந்த பழங்கள், பால், முட்டை, சிற்றுண்டிகள், சத்துமாவு கஞ்சி போன்ற சத்தாண உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் விடுதியில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டுச் சீருடைகள், காலணிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதில்லை. இப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1.00 லட்சம், 2-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000 மற்றும் 3-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 வீதமும், குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ 75000-மும், 2-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 3-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.25,000 என வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசு தொகை
ரூ.37.00 கோடியாக வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற இயலும்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 16,889 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். மேலும், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறும் வகையில் பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் சந்தா செலுத்தி பயிற்சி பெறலாம். மேலும், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் இப்பயிற்சி கூடத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா அவர்கள் உட்பட விளையாட்டுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.