Close

Independence Day – Pre Arrangement Meeting

Publish Date : 30/07/2024
.

செ.வெ.எண்:-72/2024

நாள்:-26.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(26.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நாட்டின் சுதந்திர தினவிழா வரும் 15.08.2024 அன்று கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கொடிமேடை மற்றும் கொடிக்கம்பம் அமைத்தல், விழாப்பகுதியை வர்ணம் பூசி அழகுபடுத்துதல், மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்துதல், விழாவிற்கு தேவையான இருக்கை வசதி செய்தல், ஜெனரேட்டர் ஏற்பாடு செய்தல், முக்கிய விருந்தினர்கள் பகுதியில் இருக்கை வசதி, பந்தல் பகுதியில் அமர்ந்திருப்போர் நிகழ்ச்சிகளை பார்க்கும் வண்ணம் எல்இடி டிவி அமைத்தல், தியாதிகள் அமரும் பகுதி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் பள்ளி மாணவர்கள் அமரும் பகுதியில் பந்தல் அமைத்திட வேண்டும்.

விழாவின்போது, காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தேசிய மாணவர்படை அணிவகுப்பு, காவலர்களுக்கு கேடயங்கள் வழங்குதல், காவல்துறை இன்னிசைக்குழு, போக்குவரத்து சீரமைப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் பணிகளை மாவட்ட காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து விழா மைதானத்திற்கு சிறப்பு பேருந்துகளை 15.08.2024 அன்று காலை 6.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை இயக்கிட வேண்டும்.

அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் பணி, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், தியாகிகள், மாவட்ட உயர் அலுவவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் விநியோகம், தியாகிகளை அழைத்து வருதல், முக்கிய பிரமுகர்களை இருக்கைகளுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நலத்திட்ட உதவி பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரித்தல், பயனாளிகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் மைதானத்திற்கு அழைத்து வர எற்பாடுகள் செய்திட வேண்டும்.

நாளிதழ், தொலைக்காட்சி, செய்தியாளர்களை வரவழைத்தல், விளம்பர பணிகள், புகைப்படம், வீடியோ ஒளிப்பதிவு, தியாகிகள் அனைவரையும் வரவேற்றல், நிகழ்ச்சி தொகுப்பாளர் நியமனம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்குதல், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடைகள் மற்றும் பழக்கூடைகள் வழங்குதல், முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள். பயனாளிகள் பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் தேவையான அளவிற்கு இருக்கை வசதி, புறாக்கள், மைதானத்தை சுற்றிலும் கேஸ் நிரப்பப்பட்ட கலர் பலூன்கள் பறக்கவிட ஏற்பாடு செய்திட வேண்டும்.

விழாவில் மகளிர் சுய உதவி குழுவினரை பங்கேற்கச் செய்தல், கிராம மற்றும் நகர பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் வேண்டும். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் 500 மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசு ஏற்பாடு செய்திட வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனை கருவி, சானிடைசர், தேவையான அளவு மருந்து மற்றும் உபகரணங்களுடன் நடமாடும் மருத்துவக் குழுவினரைத் தயார் நிலையில் விழா பந்தல் அருகில் இருந்திடவும், அவசர சிகிச்சை வாகனங்களை சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்திட வேண்டும்.

மைதானம், பந்தல் வரவேற்பு பகுதிகளில் அழகிய பூந்தொட்டிகள் மற்றும் செடிகள், மேடை அலங்காரம் மிகவும் அழகாகவும், கலைநயத்துடன் அமைத்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அழகிய வண்ணப் பூக்கோலம் இடுதல் வேண்டும்.

அனைத்து துறை அலுவவர்களும் 15.08.2024 சுதந்திர தின விழா அன்று அவர்களது துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கு பெயர் பட்டியலை உரிய படிவத்தில் சுருக்கக்குறிப்புடன் பரிந்துரை பட்டியலை அனுப்ப வேண்டும்.

அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து. சுதந்திர தின விழா 2024-ஐ சிறப்பான முறையில் நடத்திட ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.