Close

“International Women’s Day – 2026”

Publish Date : 12/03/2026

செ.வெ.எண்:-39/2026

நாள்: 11.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

”சர்வதேச மகளிர் தினம் – 2026” கொண்டாட்ட நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று (11.03.2026) நடைபெற்ற ”சர்வதேச மகளிர் தினம் – 2026” கொண்டாட்ட நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உலகம் முழுவதும் கடந்த 08.03.2026-அன்று ”சர்வதேச மகளிர் தினம் – 2026” சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைப் பாராட்டுவதோடு, பாலின சமத்துவம், சம உரிமை மற்றும் பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்களின் உரிமைப் போராட்டத்தினை நினைவுகூறும் வகையில்
1911-ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்தல், அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைதல் மற்றும் அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்டும் மற்றும் உலகளவில் கல்வி, விளையாட்டு, அரசியல் மற்றும் கலைத்துறையில் சாதிக்கும் பெண்களின் வெற்றிகளை கொண்டாடும் நோக்கிலும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஆண்டுதோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று பல்வேறு சுயதொழில்களை செய்து பெண்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறார்கள்.

. . .

ஒரு குடும்பத்தை வழிநடத்துவதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். எனவே, வீட்டிலிருக்கும் பெண்கள் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு குடும்பத்தையோ, உற்றார்-உறவினர்களையோ நம்பி வாழாமல் தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களை மேம்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். அத்துறைகளில் தங்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று சாதனை பெண்மணிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

அதனடிப்படையில், இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் ”சர்வதேச மகளிர் தினம் – 2026” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வாக கயிறு இழுத்தல் போட்டி (துறை வாரியாக ஒரு குழு), அதிஷ்ட கட்டம் விளையாட்டு போட்டி, கவிதைப் போட்டி, அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தனித்திறமைகள் வெளிப்படுத்துதல், கோலப்போட்டி (துறைவாரியாக – மகளிர் தின கருப்பொருள் உள்ளடக்கம்), நடனப்போட்டி (குழு நடனம் மற்றும் தனி நடனம்), பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

பெண்கள் தனது குடும்பத்தை கவனித்து கொள்வதில் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு தனித்திறமைகள் இருக்கும். நமக்குள் இருக்கும் தனித்திறமைகள் என்ன என்பதை கண்டறிந்து அத்திறமையினை மேலும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, ”சர்வதேச மகளிர் தினம் – 2026” கொண்டாட்ட நிகழ்வாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) பணியாளர்களுக்கும் மற்றும் மகளிர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் பரிசுப் பொருட்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில், விளையாட்டுத்துறையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் 35 மாணவிகளுக்கு ஸ்மார்ட் கைகடிகாரத்தை (Smart Watch) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை பெண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.