Close

Kalanjippatti – Kalaignar Centenary Training Center

Publish Date : 30/12/2025

செ.வெ.எண்:-55/2025

நாள்:-28.12.2025

திண்டுக்கல் மாவட்டம், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் நகரம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு தகுதியுடனும் அதிகமானோர் பங்கேற்றிட வழிகாட்டிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக 27.02.2024-அன்று துவக்கி வைத்தார்கள்.

சென்னைக்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மைய தரைதளத்தில் 2 பயிற்சி வகுப்பறைகள், பணியாளர் அறை, பயிற்றுநர் அறை, கணினி ஆய்வகம், நுாலகம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தரைதளத்தில் 1000 நபர்கள் அமரும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட கருத்தரங்கு கூடம் ஒன்றும், முதல்தளத்தில் கணினி நுாலகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள், 1000 மாணவ, மாணவிகள் அமர்ந்து பயிற்சி பெறும் வகையில் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட தளவாட சாமான்கள், உட்புற சாலை வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச் சுவர் வசதிகள், நுழைவு வாயில், குடிநீர் வசதிகள், புல்வெளி மற்றும் தோட்ட அலங்காரம் போன்றவற்றுடன் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதிகள் உள்ளதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் படித்த இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்திற்கு சிரமமின்றி வந்து செல்லவும், 75 இலட்சம் மதிப்பில் அமைந்த நவீன வசதிகளுடன் கூடிய 20 கணினிகளை கொண்ட மின்னனு நூலகம், TNPSC, TNUSRB, UPSC, RRB, SSC போன்ற மத்திய மற்றும் மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 3500-க்கு மேற்பட்ட புத்தகங்களை கொண்ட குளிரூட்டபட்ட நூலகம்,

அதிநவீன வசதிகளைக் கொண்ட கணினி ஆய்வகம், ஆண் பெண் இருபாலருக்கும் அமரக்கூடிய வகையில் தனித்தனி வகுப்பறைகள் மற்றும் உணவு அருந்தும் கூடம், மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் RO system வசதி. இரு சக்கரவாகனங்களை நிறுத்த கூடிய வகையில் நிறுத்துமிடம், நல்ல இயற்கையான சூழலில் அமைந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் சிறப்புடன் அமைந்துள்ளது.

இப்பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் பயிற்சி தேர்வாணையம், தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், இரயில்வே துறை, வங்கி துறை உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. போட்டித்தேர்வு நடப்பது போலவே முறையாக நேரம் நிர்ணயிக்கப்பட்டு மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடிக்கவும், பதட்டமின்றி தேர்வு எழுதவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 09.06.2024-அன்று நடைபெற்றது. அந்த தேர்வுக்கு இங்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 150-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற Group 4 தேர்வில் 6 மாணவர்களும், Group 2 தேர்வில் 1 மாணவரும், [CTS]Technical Exam–ல் 2 மாணவர்களும், தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றுள்ளனர். 2025-ஆம் ஆண்டு Group 4 தேர்வில், 7 மாணவர்கள் வெற்றி பெற்று பணிக்கு சென்றுள்ளனர், இங்கு படிக்கும் பல மாணவர்கள் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், Group I தேர்வில் இரண்டு மாணவர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். போட்டித் தேர்வு பயிற்சியில் அனுபவம் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கொண்டு தினசரி TNPSC வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. தினமும் 50 மதிப்பெண்கள் கொண்ட பாட வாரியான தினசரித் தேர்வுகளும், வினாக்களுக்கான விளக்கங்களுடன் தினமும் 2 மணி முதல் 4 மணி வகுப்புகள் நடைபெறுகிறது. வாரம் இறுதி சனிக்கிழமையன்று TNPSC மாதிரி வாரத்தேர்வுகள் நடைபெறுகிறது.

காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவன் திரு.கா.கார்த்திக் அவர்கள் தெரிவித்ததவது:-

என் பெயர் கார்த்திக், நான் திண்டுக்கல் மாவட்டம், கோட்டைப்பட்டி ஊராட்சி, காமாட்சிபுரத்தில் வசித்து வருகின்றேன். எனது பெற்றோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். நான் ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் +2 படித்தேன்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு பண்ணாரியம்மன் பெறியியல் கல்லூரியில் பி.இ (EEE) படித்தேன். நான் படித்து முடித்த பிறகு தமிழ்நாடு அரசின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், குடும்ப சூழ்நிலையின் காரணமாக என்னால் பணம் கட்டி பயிற்சி பெறும் மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கு முடியவில்லை. இந்நிலையில், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்தேன். பின்னர், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். இந்த பயிற்சி மையத்தில் அனுபவம் பெற்ற ஆசியரியர்களை கொண்டு வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு தேர்வுகளும் பல்வேறு கட்டங்களாக நடத்தினார்கள். நான் எனது குடும்ப சூழ்நிலையை கருத்திற்கொண்டு விடாமுயற்சியுடன் படித்து வந்தேன். தினந்தோறும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் ஒருமுறை அவற்றை படித்து முடித்து விடுவேன். இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்த மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு படித்து வந்தேன். அதனடிப்படையில், தேர்வில் வெற்றி பெற்று உதவி மின் பொறியாளராக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (வேடசந்தூர் பிரிவு) பணியாற்றி வருகிறேன். எனது வெற்றிக்கு காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. படித்த இளைஞர்களின் வாழ்வினை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை அமைத்து இளைஞர்களின் வாழ்வினை ஒளிமயமாக்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவன் திரு.அ.ராஜேஷ் அவர்கள் தெரிவித்ததவது:-

எனது பெயர் ராஜேஷ். நான் வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சாலையூர் நால்ரோட்டில் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். நான் எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்துவிட்டு, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து முடித்தேன்.

படித்து முடித்தவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், எந்த அடிப்படையில் தேர்வுகளை அணுகினால் வெற்றி பெற முடியும் என்று தெரியவில்லை. பணம் கட்டி தனியார் பயிற்சி வகுப்பிகளில் சேர்ந்து பயிலவும் என்னால் முடியவில்லை. இதனால், நான் வீட்டில் தனியாக படித்து வந்தேன்.

இந்நிலையில்தான், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்தேன். பின்னர், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். இந்த பயிற்சி மையத்தில் அனுபவம் பெற்ற ஆசியரியர்களை கொண்டு வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு தேர்வுகளும் பல்வேறு கட்டங்களாக நடத்தினார்கள். இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மற்ற மாணவர்களும் அரசுப் பணி ஒன்றிணையே இலக்காகக் கொண்டு பயின்று வந்தனர். அவர்களுடன் பழகியதால் எனக்குள் படித்து அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஆசிரியர் பெருமக்களும், மாணவர்களும் எனக்கு எப்படி படிப்பது, எவ்வாறு தேர்வுகளை அணுகுவது என்று ஆலோசனை வழங்கினார்கள். நானும் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொடர்பு விடாமுயற்சியுடன் படித்து வந்தேன்.

தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் குரூப்-2 & 2ஏ பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்விற்கு நல்ல முறையில் படித்து தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்று எனக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டேன். அதனடிப்படையில், குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது திண்டுக்கல் மண்டலத்தில் (வன பாதுகாப்பு படை) வனவர் பணியினை தேர்வு செய்து பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த வெற்றிக்கு காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளும், மாதிரித் தேர்வுகளும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம். படித்த இளைஞர்கள் அனைவரும் ஏதாவதொரு அரசுப் பணியில் சேர வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை அமைத்து இளைஞர்களின் வாழ்வினை முன்னேற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவி செல்வி.ரா.பிரியங்கா அவர்கள் தெரிவித்ததவது:-

எனது பெயர் பிரியங்கா. நான் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் வசித்து வருகிறேன். எனது அப்பாவின் சம்பளத்தில் மட்டுமே குடும்பத்தை நடத்தும் சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில், நான் ஒட்டன்சத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 முடித்துவிட்டு, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி (வேதியியல்) படித்து முடித்தேன். படித்து முடித்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்து வந்தேன். இந்நிலையில்தான், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்தேன். பின்னர், காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். பயிற்சி வகுப்பிற்கு செல்லும்போது எனக்குள் படித்து தேர்ச்சி பெற முடியுமா என்ற எண்ணம் தோன்றியவண்ணம் இருந்தது.

ஆனால், பயிற்சி வகுப்பிற்கு தொடர்ந்து செல்லும் போது, ஆசிரியர் பெருமக்கள் ஊக்கமூட்டும் வகையில் பேசுவதையும், மற்ற மாணவர்களின் ஆர்வத்தையும் பார்த்த பின்னர் நாமும் படித்து தேர்ச்சி பெற முடியும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணம்தான் நாம் தேர்வில் வெற்றி பெறுவதற்கான முதற்படி என்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து படித்து வந்தேன். இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் அரசுப் பணி என்ற வெற்றி இலக்கை நிலைநாட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனடிப்படையில், இந்த பயிற்சி மையத்தில் அனுபவம் பெற்ற ஆசியரியர்களை கொண்டு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளையும், மாதிரித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டு நடத்தப்படும் தேர்வுகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். இதனால், குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்று ஒசூர் மண்டலத்தில் வணிகவரித்துறையில் தட்டச்சர் பணியிடத்தை தேர்வு செய்து தட்டச்சராகப் பணியாற்றி வருகிறேன். படித்த மாணவ, மாணவியர்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை அமைத்து அவர்களின் வாழ்வினை ஒளிபெறச் செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.