Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-43/2024
நாள்:-15.07.2024
திண்டுக்கல் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், 19 பயனாளிகளுக்கு ரூ.8.46 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.07.2024) நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 270 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில் மூன்று சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கும், இலவச தையல் இயந்திரம் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கும் இன்றைய தினமே ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூ.9,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ரூ.12,000 மதிப்பிலான தையல் இயந்திரம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.25 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள், கைம்பெண்கள் கடன் திட்டத்தில் 2 பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8.46 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.