Close

Monitoring Officer – Inspection And Meeting

Publish Date : 26/12/2025
.

செ.வெ.எண்:-59/2025

நாள்:24.12.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 23.12.2025-அன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அரசு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் விவரங்களை மொபைல் செயலியில் பதிவு செய்யப்பட்டதை ஆய்வு செய்தார். மேலும், பாலகிருஷ்ணாபுரத்தில் சென்ற மாதம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுயஉதவிக்குழு புதிதாக துவங்கப்பட்ட Heal mix cluster (ஊட்டச்சத்து தொகுப்பினை) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, துறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட முதன்மை அலுவலர்களுடன் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஆகியன குறித்தும் துறை சார்நத அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன், சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை கிராம மக்களுக்காக வழங்கி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று குறைகளை தீர்க்கும் வண்ணம் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமை 15.07.2025-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்முகாம் தொடர்ந்து 45 நாட்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களின் மூலம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த மனுக்களில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 61,716 பெண்கள் பயனடைந்துள்ளனர்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் தன்னலமற்று, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை அந்தந்த துறை அலுவலர்கள் உறுதி வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மூ.திருமலை, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.