“National Deworming Day”
செ.வெ.எண்:-25/2026
நாள்:-10.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, 7,82,266 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது சிறப்பு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை (பிப். 10-ஆம் தேதி) முன்னிட்டு, குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்இ திண்டுக்கல் செசிலியாஸ் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் இன்று(10.02.2026) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், “தேசிய குடற்புழு நீக்க தினம்“ உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, ”வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம், உருண்டைப்புழு, சாட்டைப்புழு, கொக்கிப்புழு தொற்றினை ஒழிக்க முடியும் என்று அறிவேன்.குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால், உடல் வளர்ச்சி, அறிவு திறன்,நோய் தொற்றிற்கான எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கும் என்பதையும் நன்கு அறிவேன். நானும், எனது சுற்றத்தினரும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்றும், சுகாதார கழிவறையை பயன்படுத்துவோம் என்றும், சாப்பிடும் முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவோம் என்றும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்றும் உறுதி கூறுகிறேன். குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதின் மூலம், குடற்புழு தொற்றில்லா. இரத்த சோகை இல்லா தமிழ்நாடு, உருவாக ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும்இ தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்டப்பட்ட அனைத்து பெண்களுக்கும் தேசிய குடற்புழு நீக்க தினத்தை(பிப்.10-ஆம் தேதி) முன்னிட்டுஇ குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கான சிறப்பு முகாம் இன்று(10.02.2026) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 அங்கன்வாடி மையங்கள், 1,909 பள்ளிகள் மற்றும் 78 கல்லூரிகள் என மொத்தம் 4008 இடங்களில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாம் வாயிலாக 6.14 இலட்சம் மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,68,193 அனைத்து பெண்கள் என மொத்தம் 7,82,266 நபர்கள் பயன்பெறவுள்ளனர். இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான சிறப்பு முகாம் 17.02.2026 அன்று நடைபெறவுள்ளது.
குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு, ரத்த சோகை, குமட்டல் வாந்தி, வைட்டமின் “ஏ“ சத்து குறைபாடு போன்றவைகள் காணப்படும். குடற்புழு தொற்றை தடுப்பதற்கு குழந்தைகளுக்கு (அல்பெண்டசோல்) மாத்திரை கொடுத்து நன்றாக சப்பி மென்று உட்கொள்ளவும், சிறு குழந்தைகளுக்கு மாத்திரையை பொடியாக்கி நீரில் கரைத்து கொடுக்க வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது குழந்தைகளுக்கு 1 மாத்திரையும் வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் குடற்புழு நீக்க மாத்திரை தங்கள் ஆசிரியர் வாயிலாக வழங்கவும்இ அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர் வாயிலாக வழங்கப்பட உள்ளது.
குடற்புழு நீக்க மாத்திரையின் நன்மைகள், குடற்புழு மாத்திரை நாள் பற்றி ஆசிரியர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாரதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஆர்.செல்வக்குமார், மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்க கல்வி) திரு.மதியழகன், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் திருமதி உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.