Pongal Celebration – Collectorate
செ.வெ.எண்:-41/2026
நாள்:-14.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், போடிக்காமன்வாடி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் இன்று (14.01.2026) நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பங்கேற்றார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாவட்டந்தோறும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராமியக் கலைஞர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து “சமத்துவப் பொங்கல்” திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதன் பேரில், இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராமங்களிலும் “சமத்துவப் பொங்கல்” திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்து வருகின்றனர். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 07.01.2026-அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,02,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்கள்.
நாட்டுப்புற கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும், விவசாயப் பெருமக்களை அங்கீகரிக்கும் வகையில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து இன்று போடிக்காமன்வாடி கிராமத்தில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் “சமத்துவப் பொங்கல்” திருவிழாவில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பொங்கல் பொங்குவது போல உங்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சிகள் பொங்க அனைவருக்கும் எனது இனிய பொங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாட்டுப்புறக் கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கௌரவித்து பரிசுப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.