Close

Pongal Gift Distribution

Publish Date : 10/01/2025
.

செ.வெ.எண்:-18/2025

நாள்:-09.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

6,85,629 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, வேலுநாச்சியார் வளாக குடியிருப்பு நியாயவிலைக் கடையில் இன்று(09.01.2025) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1035 நியாயவிலைக்கடைகளில் 6,85,629 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,56,509 வேட்டிகள், 5,55,955 சேலைகள் வழங்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். நியாய விலைக்கடைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ள தேதி, காலம், நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்தின்படி நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, துணைப்பதிவாளர்(பொதுவிநியோகத்திட்டம்) திரு.இரா.அன்புக்கரசன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.